பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஆகஸ்ட் 10, 2016

கதை வாசிப்பு 22 - 'மத்திய சிறைவாசி எண் 3718'

கதை வாசிப்பு 22 -
 'மத்திய சிறைவாசி எண் 3718'

    விகடன் (10/8/16) இதழில் லஷ்மி சரவணகுமாரின் 'மத்திய சிறைவாசி எண் 3718' என்ற சிறுகதை வந்துள்ளது.

    இன்னொருவர் மனைவிமீதான ஈர்ப்பை காதலை வேறொரு கோணத்தில் இருந்து சொல்லியுள்ளார். கதை சொல்லப்பட்ட விதம் படிப்பவரின் மனதில் பாதிப்பைக் கொடுக்க தவறவில்லை.

கதை.

   சிறையில் இருக்கும் விஜிக்கு அமுதா எழுதிய கடிதத்தில் இருந்து கதை தொடங்குகிறது. அமுதாவின் கணவன் மனோ இராணுவத்தில் இருப்பவர். பாதிநாள் விடுமுறையில் ஊரிலேயே இருப்பார் அவர்களுக்கு ஆதிரா என்ற குழந்தையும் இருக்கிறது.
விஜி தன் மீது கொண்டிருக்கும் இனம் புரியாத ஈர்ப்பை புரிந்துக்கொண்டும் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள் அமுதா.
அமுதாவின் கணவன் ஊரில் இருக்கும் போதெல்லாம் அவரை சந்திப்பதை தவிர்க்கிறான் விஜி. மனோ ஊர் திரும்பும்போது மட்டும் வழியனுப்ப வந்த விஜியை இராணுவத்தில் சேர்வதற்கு தயாராக சொல்லி வீட்டில் பழுது பார்க்கும் வேலை இருப்பதாகவும் சரி செய்ய ஆள் அனுப்பவும் சொல்லி விஜியின் தேவைக்கு பணம் கொடுக்கிறார் மனோ.
வீட்டில் அமுதாவும் குழந்தையும் மட்டும் இருக்கிறார்கள்.

   வீட்டிற்கு வந்திருந்த விஜி அமுதாவிற்கும் எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்துவிடுகிறான். அதனை பெற்றுகொண்ட அமுதா சுயநினைவு வந்து அதனை தவிர்த்து அவனுக்கு இதெல்லாம் வயது கோளாறு அவன் மீது எந்த வெறுப்பும் இல்லையென்று அனுப்புகிறாள்.

   பின்னர் ஒரு நாள், ஊர் பிரச்சனையில் மனோ வெட்டிக்கொல்லப்படுகிறார்.
மனோவைக் கொலை செய்த இருவர்  நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படுகிறார்கள். எதிர்பாராத விதமாக விஜி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு வெட்டிக்கொல்கிறான். அவ்விடமே கைதாகி கொண்டுச்செல்லப்படுகிறான். அங்கிருக்கும் கூட்டத்தில் அமுதாவை கண்டு அவள் மட்டு புரியும் விதம் புன்னகைக்கிறான்.

    சிறைச்சாலையிலும் அமுதாவிற்கு தொல்லை கொடுக்காமல் தானே தவறான வழிகளில் பணம் சம்பாதிக்க முயன்று பின்னர் காவலாளிகளால் தண்டிக்கப்படுகின்றான். வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றலாகிறான். அங்கு அவனை சந்திக்க வரும் அமுதாவுடனான உரையாடலில் அவள் இப்படியாக சொல்கிறாள், 'இனி நான் உனக்கு தேவையில்லாமல் இருக்கலாம் ஆனா நீ எனக்கு தேவை'.

    விஜிக்கு உணவு கொடுக்கும் முன்பாக அங்குள்ள விண்ணப்பத்தில் தன்னை விஜியின் மனைவி என குறிப்பிட்டு எழுதுகிறாள்.

கதை குறித்து,

    பொது புத்தியில் இருந்து மறக்கப்படும் மறுக்கப்படும் மனிதனின் கதையாக இதனைச்சொல்லலாம். சமூகம் சொல்லிக்காப்பாற்ற நினைக்கும் நன்னெறிகூறுகளை இதில் காண முயன்றால் இக்கதை மீது இயல்பாகவே ஓர் வெறுப்பு ஏற்படும்.

    கதை சொல்லும் விதம் வாசகர்களை கவர்ந்துள்ளது. யூகிக்க முடியாமலும் தான் யூகித்ததை நம்பாமலும் கதை செல்கிறது. உதாரணமாக விஜி கொலை செய்வான் என நாமே நம்புகிறோம். பின்னர் ஏன் கொலை செய்தான் என நம்ப மறுக்கின்றோம்.

    விஜிக்கும் அமுதாவுக்குமான ஈர்ப்பை அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லியுள்ளார் எழுத்தாளர். கதை காட்சிகளாக கண் முன் விரிவது கதையின் பலம்.

    தன் கணவன் மனோவின் மரணத்தை அவள் எதிர்கொள்ளும் விதம் அவள் மீது நமக்கு பரிதாபத்தைக்கொடுக்கிறது. விஜி் தனக்கு கொடுத்த முத்தத்திலும் , பின்னர் விஜியின் மனைவி என தன்னை சொல்லிக்கொள்ளும் போதும் அமுதா மீது கோவமோ வெறுப்போ வரவில்லை.  அமுதா செய்தது சரியென விஜியின் வருகைக்காக நம்மையும் காக்க வைப்பது மூலம் கதையில் வென்றுள்ளார் லஷ்மி சரவணகுமார்.
இக்கதை அவரின் வாசகர்களை அதிகப்படுத்தும் என நம்பலாம்.


- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்