பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 02, 2016

கதை வாசிப்பு 6 - ’காமச்சாம்பல்’

    மே மாத (2016) இதழில் பாட்டாளி எழுதியிருந்த 'காமச்சாம்பல்' சிறுகதை அழ வைத்தது. சிறுகதைக்கு ஏற்ற தொடக்கம் அமைந்துள்ளது. செல்லையா பண்டிதருக்கு ஏற்பட்டிருக்கும் நிலமை குறித்து வருந்தும் கதைசொல்லி. செல்லையா பண்டிதர் குறித்து விவரிக்கின்றார். அவ்விவரணை நம் கண் முன் காட்சிகளாக விரிகின்றன. 

    பறையடிப்பதிலும் பாடுவதிலும் கைத்தேர்ந்தவர்தான் செல்லையா பண்டிதர். நாவிதர் குடும்ப மரபில் வந்திருந்ததால் இவரின் கலையார்வத்தை ஊர் கொஞ்சமும் செவி கொடுக்கவில்லை. வெளியூர் சென்று தான் யார் என்பதை மறைத்து பாடம் கற்று பேர் புகழோடு ஊர் திரும்புகின்றார். காமனை எரிக்கும் விழாவில் எரிந்த கட்சிக்கு ஒருவரும் எரித்த கட்சிக்கு ஒருவரும் என பாடும் வழக்கம் உள்ளது. கூடவே இருவரும் தத்தம் அறிவு திறனை பாடல் வழி கேள்விகள் மூலம் நிரூபிப்பார்கள். 

    செல்லையா பண்டிதர் தன் அறிவு கூர்மையால் ஜெயிக்கிறார். சங்க இலக்கியம், சிவப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு என எல்லாவற்றையும் தன் பாட்டில் இணைத்து எதிரணியை வெல்கிறார். கதைசொல்லி நேர்த்தியாக அதனை சொல்லிச்செல்கிறார்.

    அப்படியான பண்டிதருக்கு ஏற்பட்ட நிலை வாசகர் மனதில் ஒருவித தொல்லையைக் கொடுக்கிறது.

  பெண்ணை காப்பாற்றுச் சென்று தனது கைவிரல்களை பலி கொடுத்துவிடுகின்றார். மீண்டும் அவரால் பறையடிக்க முடியாமல் போகிறது. சோகத்தில் நோயில் படுக்கின்றான். பின்னர் பாடுவதோ கச்சேரிகளுக்கு செல்வதோ இல்லை. தன்னை தானே சிறைபடுத்திக்கொள்கிறார். இதையெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் கதை சொல்லி மறுநாள் பறையடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து செல்கிறார். செல்லையா பண்டிதர் வீட்டின் முன் ஊரே கூடியுள்ளதாக முடிகிறது கதை.

    கதையை படித்து முடித்ததும் கண் கலங்கி மனதில் சஞ்சலம் ஏற்படுகிறது.
நல்ல சிறுகதை என்பது அக்கதை முடிந்த இடத்தில் இருந்து வாசகனை தொந்தரவு செய்யவேண்டும் என நம்புகிறேன்.

    செல்லையா பண்டிதரை ஒட்டு மொத்தமாக படைப்பாளர்கள், கலைஞர்கள் என பொருள் கொள்வோம். பெண்ணை காப்பாற்ற சென்று தன் விரலை இழக்கிறார் அப்பண்டிதர். சமூக அழுக்குகளை கலைவதற்கு கலையை கையாளுகின்றவர்களும் தங்கள் வாழ்வின் ஆதாரமான நிம்மதியை இழக்கிறார்கள்.

   பண்டிதரை போல எத்தனை படைப்பாளர்கள் விரக்தியிலும் மன உளைச்சலிலும் தங்களை தாங்களே சிறை வைத்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி என் அழுகைக்கு காரணமாக இருக்கலாம்.

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்