பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூலை 15, 2016

கதை வாசிப்பு 14 – ‘அறியப்படாத தீவின் கதை’ (குறுநாவல்)

கதை வாசிப்பு 14 – ‘அறியப்படாத தீவின் கதை’


     தடித்த புத்தகங்களில் இருக்கும் ஒரு வகை அச்சம் மெலிந்த புத்தகங்களில் இருப்பதில்லை. சட்டென எடுத்து சடாரென படித்து முடித்துவிடலாம் என்கிற கொஞ்சூண்டு ஆணவத்தையும் இந்நாவலில் இழந்துவிட்டேன். வெறும் 56 பக்கங்கள் உள்ள நாவல்தான் . அமர்ந்த இடத்திலேயே எந்த தொல்லைகளும் இன்றி இரண்டு மணிநேரத்தில் படித்துவிடலாம். 

     தொல்லைகளுக்கு மத்தியில் மூன்றில் இருந்து நான்கு மணிநேரத்தில் படித்துவிடலாம். ஆனால் இக்குறுநாவல் அப்படியான வாய்ப்பை எனக்கு கொடுக்கவில்லை. நாட்கணக்கில் இந்நாவலில் சிக்கிக்கிடந்தேன். வாசித்து முடித்த பின் ஏற்படும் சிக்கல் ஒருவகையானது என்றால் வாசிக்கும் போதே ஏற்படும் சிக்கல் வேறுவகையானது. 

     வாசிப்பை ஒருவன் கையில் எடுக்க என்ன காரணம் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். நான் ஏன் வாசிக்க விரும்புகிறேன். வாசிப்பின் வழி எதனை கண்டறிய முயல்கிறேன். வாசிப்பதின் மூலமும் வாசித்தது குறித்து பேசுவது எழுதுவது மூலமும் எதனை முன்னெடுக்கிறேன். உண்மையில் நான் நோய்வாய்ப்பட்டிருக்கிறேன். மனதளவிலும் உடல் அளவிலும் பெயர் குறிப்பிட முடியாத நோயால்  தினம் சித்திரவதை அனுபவிக்கிறேன். பெயரற்ற நோயென்றாலும் வாசிப்பென்னும் மருந்தை கொண்டிருக்கிறது. 

     பெயர் அறிந்திடாத இந்நோயில் இருந்தும் என் சதைகளை நானே தின்று தீர்ப்பது மாதிரியான அவஸ்த்தையில் இருந்தும் என்னை காப்பாற்றிக்கொள்ளவே வாசிக்கிறேன். நான் முன்னேடுப்பது என்னைத்தானே தவிர வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் இம்முன்னெடுப்பு இவ்வுல அடுக்குகளில் இதே போன்று பெயர் குறிப்பிட முடியாத நோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அவர்களுக்கான மருந்தை காட்டிக்கொடுக்கும் என நம்புகின்றேன்.

    அதன் வழி நான் வாசிப்பதில் ஏதோ ஒரு மூலையில் என்னை கண்டடைகிறேன். படித்ததை குறித்து எழுதும் போதும் மற்றவர் போல தள்ளி நின்று பார்க்க என்னால் முடியவில்லை. 

இந்நாவல்;

     அறியப்படாத தீவின் கதை’ நாவலை ஜோஸே ஸ்ரமாகோ எழுதியிருக்கிறார். மீண்டும் மீண்டும் முதலில் இருந்தே இந்நாவலை வாசிக்க வேண்டியிருந்தது. சில பக்கங்களை தாண்டிய பின் எதையோ தவற விட்டுவிட்டதாக மனம் பதட்டமடைந்தது. மறுபடியும் நாவலில் தொடக்கத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. வழக்கமாக புத்தகங்களை வாசிக்கும் போது முன்னுரை மற்றும் பின்குறிப்புகள் ஏதேனும் இருந்தால் வாசிப்பது வழக்கம். சில தடவை அப்படி செய்வதால் 

    ஏற்கனவே சொல்லப்பட்டதை நினைத்தே நானும் வாசிப்பில் ஆழ்ந்துவிடுகிறேன். தட்டுத்தடுமாறினாலும் தனியான வழி கண்டறியாமல் ஏற்கனவே போடப்பட்டிருக்கும் பாதையில் போய்விடுகிறேன். இப்போதெல்லாம் நாவலோ சிறுகதை தொகுப்போ வாசிக்கத்தொடங்கும் போது, நேரடியாக கதைக்குள்ளே சென்றுவிடுகிறேன். எல்லாம் முடிந்த பின்னர்தான் முன்னுரையில் நாவல் குறித்தும் சிறுகதைகள் குறித்தும் வாசித்து நான் கண்டறித்த பாதை குறித்து சிந்திக்கிறேன். இந்நாவலை அவ்வாறுதான் முன் அநுமானங்களை தவிர்க்க நாவலுக்கு சென்றுவிட்டேன்.


நாவல்

    அறியப்படாத தீவு என்ற ஒன்று இருப்பதாக நம்புகின்றவன் மன்னரை சந்திக்கச்செல்கிறான். தான் நம்பிக்கொண்டிருக்கும் அறியப்படாத தீவினை கண்டுபிடிக்க கடல்வழி பயணம் செய்ய நினைக்கிறான். அதற்கு தனக்கு ஒரு படகு தேவை. அதனை பெறுவதற்காகவே மன்னரிடம் செல்கிறான். மன்னரின் அரண்மனை விசித்திரமாக இருக்கிறது. பல கதவுகள் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கதவுகளும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கின்றன. படகுக்காக சென்றவன் விண்ணப்பங்களுக்காக கதவின் அருகில் இருக்கிறான். அரசனோ சலுகைகளுக்காக கதவுக்குள்ளே இருக்கிறான். அதிலும் அச்சலுகைகள் அரசுனுக்கு கிடைக்கும் சலுகைகள்.

     படகு வேண்டி வந்தவன் தொடர்ந்து அக்கதவை தட்டுகிறான். இறுதியில் அவனுக்கான காரணத்தை கேட்டறிய அரசன் தன் முதல் செயலாளருக்கு சொல்ல, அவர் இரண்டாவது செயலாளருக்கு சொல்ல, அவர் மூன்றாமவருக்கு சொல்ல, அவர் முதல் உதவியாளருக்கு சொல்ல, அவர் இரண்டாம் உதவியாளருக்கு சொல்ல இப்படி ஒவ்வொரு படியாக சென்று கடைசியில் சுத்தம் செய்யும் பெண்ணிடம் சொல்லப்படுகிறது காரணத்தை வேலைக்கார பெண் வினவுகிறாள். பட வேண்டி வந்தவனோ தான் அரசரிடம் மட்டுமே அது குறித்து பேச வேண்டும் என தீர்மானமாக சொல்லிவிடுகிறான். அவன் சொன்னது வேலைக்கார பெண்ணின் மூலமா வந்த வழியே ஒவ்வொரு படியா கடந்துக்கடந்து அரசனிடம் செல்கிறது. 

     அரசன் அவனிடம் வருகிறான். அவனுக்கும் விண்ணப்பிக்க வந்தவனுக்குமான உரையாடல் கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது. ”நீ யார் . நான் ஏன் உனக்கு படகு கொடுக்க வேண்டும் . நான் இந்நாட்டின் அரசன் இந்நாட்டில் இருக்கும் படகுகள் அனைத்தும் எனக்குச் சொந்தமானது.” என்ற அரசனுக்கு விண்ணப்பித்தவன் இப்படி பதில் கொடுக்கிறான், “அவை உங்களுக்கு சொந்தம் என்பதைவிட நீங்கள் அவைகளுக்கு சொந்தம், அவை இல்லாமல் நீங்கள் இல்லை ஆனால் நீங்கள் இல்லாமலும் அவை கடலில் பயணம் செய்யும்”

     ஒருவழியாக அறியப்படாத தீவை கண்டறிய அவனுக்கு படகு கொடுக்க அரசன் சம்பதித்து மாலுமியை சந்திக்கச்சொல்லி குறிப்பு ஒன்றை கொடுக்கிறான். விண்ணப்பித்தவன் புறப்படுகின்றான். அவன் செல்வதை பார்த்து அவனிடம் முன்பு விசாரித்த வேலைக்கார பெண்ணும் அவனை தொடர்கிறால். இனியும் அரண்மனையில் தான் வேலை செய்ய முடியாது எனது முடிவெடுத்து முடிவென்னும் கதவின் வழி வெளியேறுகிறாள்.

    படகு கேட்டவன் மாலுமியை சந்தித்து உரையாடுகிறான். அறியப்படாத தீவு குறித்து அங்கும் யாருக்கும் புலப்படவில்லை. ஆனாலும் அப்படியொரு தீவை கண்டறிவதில் தனக்கிருக்கும் பேராசையை முன் வைக்கிறான் படகு கேட்டவன். அவன் கேட்டது  போல கடல் பயணத்துக்கு ஏற்ற கப்பல் கிடைக்கிறது. அதனை மறைந்திருந்து பார்த்த வேலைக்கார பெண் உணர்ச்சிவசப்பட்டு தன்னை வெளிப்படுத்துகிறாள். பின்னர் அவளும் தன்னுடன் சேர்ந்துக்கொள்ளலாம் என படகு கேட்டவன் சொல்கிறான்.

     கப்பலை அவள் சுத்தம் செய்கிறாள். உதவிக்கு யாரேனும் வருகிறார்களா என தேடிச்சென்றவன் யாருமின்று உணவு பொட்டலத்துடன் வருகிறான்.  அவளுக்கும் அவனுக்குமான உரையாடல் அங்கே கதையை வேறொரு இடத்துக்கு இட்டுச்செல்கிறது. 

    கனவுவென்னும் பெருங்கடலில் அன்றைய இரவை அவன் கடக்கிறான். அக்கனவு அவனை பயமூட்டுகின்றது. விடிகிறது. அவனும் அவள அவனை கட்டியணைத்தும் அவள் அவனை கட்டியணைத்தும் இருக்கிறார்கள். பின்னர் விழித்துவிட்ட இருவரும் அப்படகுக்கு அதுவரை பெயரற்று இருந்த கப்பலுக்கு இருவரும் பெயரிடுகிறார்கள். இப்போது அந்த கப்பல் அறியப்படாத தீவு கடலை நோக்கி கிளம்பியது தன்னை தேடிக்கொண்டு என நாவல் முடிகிறது.

   இங்கு அரசன் , அரண்மனை , மாலுமி போன்றோர் ஒரு பரிணாமத்தை கொடுக்கிறார்கள். ஆனாலும் யாருக்கும் தெரிந்திடாத அறியப்படாத தீவுக்குச்செல்ல படகு கேட்டு வந்தவன், அவனை அறிந்திடாவிட்டாலும் அவன் போகவிருக்கும் அறியப்படாத தீவுக்கு தானும் செல்ல ஆயுத்தமானவள் மற்றும் அறியப்படாத தீவுதான் இக்குறுநாவலில் என்னை பாதிக்கிறது.

எது இந்த அறியப்படாத தீவு.?

   ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணுமா? தாம்பத்தியமா? தன்  ஆசையா ? எதிர்பார்ப்பா? இலட்சியமா ? என சிந்தித்துகொண்டிருக்கிறேன்.

   படிமமாக சொல்லப்படுவது அதனை வாசிக்கின்றவர்களின் அறிவும் அனுபவமும் சார்ந்து ஒரு உருவகத்தை கொடுக்கிறது. அப்படிப்பார்க்கையில் எனக்கு, நான் நம்பும் அறியப்படாத தீவாக இருப்பது என் எழுத்துதான். அதை நோக்கித்தான் செல்ல எத்தனிக்கிறேன். ஏன் எதற்கு எப்படி என என்னை நோக்கி ஊரும் உலகும்  உறவுகளும் கேட்கின்ற கேள்விகளுக்கு இந்நாவலில் சொல்லியிருப்பது போல அதனை யாரும் அறிந்திருக்கவில்லை அதனை கண்டறியவே நான் போகிறேன்.

-       -   தயாஜி



அறியப்படாத தீவின் கதை’
- காலச்சுவடு , உலக கிளாசிக் குறுநாவல்
புத்தகங்களை வாங்குவதற்கு ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’.
தொடர்புக்கு 016 - 473 4794, 014 - 900 5447




Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்