பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 16, 2016

விதையாவேன்

என்றோ ஒரு நாள்
பூமி வந்துச் சென்றவனாய்
அவ்வபோது நினைக்கிறேன்
திரும்ப திரும்ப
வந்து போகும் நினைவுகளின்
விளைவுகள் மட்டுமே
எனக்கு நெருக்கமானவையாக
மாயத்தோற்றம் போடுகின்றன
என் மனத்தோற்றம் முன்
இந்த மாயத்தோற்றங்களுக்கு
ஏமாற்றம்தான்
மாயை சூழ் மனதின குலத்தின்
மிஞ்சப்போகும்
ஒற்றையறிவு உயிர் நான்
நானே மீண்டுமொரு பரிணாமத்திற்கு
விதையாவேன்

ஜனவரி 14, 2016

தீ

ஓவியம் சந்துரு
தீ
காட்சியாக்கப்பட்டு
போதிக்கப்படுகிறது - அனைக்க

கற்றவர்
காட்சியினை
போதிக்கிறார்
சோதிக்கிறார் - கொளுத்த

தீ
எரிந்துக்கொண்டே
வலிக்கிறது

தொடர்ந்து
காட்சியாக்கப்பட்டு
போதிக்கப்படுகிறது
சோதிக்கப்படுகிறது
தீ - குறைந்தால்
கொளுத்தப்படுகிறது

எல்லோரும் கற்றோம்
தீ - அனைக்க

எதனையும் கிழித்திடவில்லை
போதனை மட்டும்
செய்கிறோம்

எரியும்
தீ - எரியட்டுமே
எவன் செத்தால் நமக்கென்ன



-தயாஜி-
 

ஜனவரி 08, 2016

உன் சக பயணி





போராடிக்கொண்டே இரு
உனக்காக பேசிவர்கள் எல்லாம்
உனக்காகவே பேசியவர்கள் அல்ல

போராடிக்கொண்டே இரு
உன்னோடு நடந்து வர
வெற்றி தோல்விக்கு வழி விடு
விழுந்தாலும் எழுந்தாலும்


போராடிக்கொண்டே இரு
உனக்காக வாழ்விருக்கும்
உனக்கெனவே வாய்ப்பிருக்கும்

போராடிக்கொண்டே இரு
தூங்கிடும் நேரத்திலும்
கனவுகளை கணக்கிடு
கண்டுவிட்ட கனவுகளை
கண்முன்னே நடத்திட

போராடிக்கொண்டே இரு
மறையும் சூரியன் மறுபடிமறுபடி எழுது
மனதின் குறிப்புகளை முயன்று நீ எழுது

போராடிக்கொண்டே இரு
பூக்கள் நிறைந்தாலும்
பூகம்பம் புகுந்தாலும்
வழிகள் வேறுல்லை நமக்கு
நீ

போராடிக்கொண்டே இரு
போராட்டம் என்பது போர் தொடுப்பதல்ல
போராட்டம் என்பது தேர் இழுப்பதல்ல
போராட்டம் என்பது உயிர் கொலையல்ல
போராட்டம் என்பது விட்டு ஓடுவதல்ல
போராட்டம் என்பது பழிக்கு பழியல்ல
போராட்டம் என்பது ஆயுதம் பிடிப்பதல்ல

போராட்டம் என்பது என்ன..?
கண்ணாடி முன் நின்று
தற்காலிக நிலையோடு
சுயத்தை வெளிகொண்டு
வருங்கால உன்னை
அதன் வழி அறிதலே போராட்டம்
அறிந்த உன்னை
உலகுக்கு அறிமுகம் செய்வதே போராட்டம்
அறிமுகம் ஆனப்பின்னே அழியாமல் இருப்பதே போராட்டம்
அழியாமலிருக்கும் உன்னை ஆளுக்கு ஆள் பின்தொடர்வதே போராட்டம்

போராடிக்கொண்டே இரு
உதைத்த சொற்களை கொண்டு
உனது சொல்லை நடத்து
உதைத்த கால்களை கொண்டு
உனது வழிகளை கவனி
முதுகில் குத்தியவர்க்கு முகத்தினை காட்டு
கருவிழி கண்டு அவர்கள்
மூச்சடைத்து போவார்கள்

பயந்து ஓடாதே
உடனேவும் பாயாதே
பொறுமை கொள்
போராட்டத்தில் பால பாடம் பொறுமை

போராடிக்கொண்டே இரு
முற்றுபுள்ளிகளை கடந்தும் போராடு
வாழுவரை வாசித்துக்கொண்டே இரு
வாழ்ந்த பின்னரும் வாசிக்கப்படுவனாய் இரு

எதையும் மறக்காதே
எக்காரணமும் வெறுக்காதே

போராடிக்கொண்டே இரு
புகைப்படங்களை சேகரி
ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரிடு
பெயருக்கு பின்னால் நடந்ததை நினைவு கொள்
கொண்ட நினைவுகளில் பாடம் காண்
தோல்விகள் எல்லாம் துணையாய் வரும்
வெற்றிகள் உன்னில் வேர்வையாய்
வெளிபடட்டும்

சோகம் கொள்ளாதே
சோறுக்கு வருந்தாதே
சொர்க்கமோ நரகமோ
இந்த நொடியில் இரண்டையும்
நீயே நிர்வகி

பூக்கள் மட்டும் போதாது
முட்களும் கைகளை கிழிக்கட்டும்
வலி எல்லாம் வடுக்கள் ஆகும்
வடுக்கள் எல்லாம் தழுப்புகள் ஆகும்
தழும்புகள் சேர்ந்து காப்பு காய்க்கும்
காப்புகாய்த்திட அவ்விடம் பலமாகும்
அதுதான் புது வரவாகும்
அதுவே ஒரு வரமாகும்

யார் பேச்சிலும் மயங்காதே
யார் பேச்சையும் மறுக்காதே

ஏது செய்தாலும் நிதானி
உன் வெற்றிக்கு நீதான் இனி

இதுவரை சொன்ன நான் யார்
இத்தனை சொல்ல நான் யார்

உன் சக பயணி

- தயாஜி

தாயாக்கி அழகு பார்ப்பவர்கள்





குழந்தைகள் எப்போதும்
குழந்தைகளாக இருப்பதில்லை
அவர்கள் வளர்ந்துவிடுவார்கள்
வயதில் முதிர்ந்துவிடுவார்கள்

தங்களின்
குழந்தைத்தன்மையை தொலைத்துவிடுவார்கள்


ஆனால்

இவர்கள்
எவ்வளவு வளர்ந்தாலும்
எவ்வளவு முதிர்ந்தாலும்
எப்போதும் குழந்தைகள்தான்

தங்களுக்கென்று ஒரு மொழி
தங்களுக்கென்று ஒரு சிரிப்பு
தங்களுக்கென்று ஒரு அசைவு
என தனித்தனியே

தங்களுக்கான உலகத்தை
தாங்களே
உருவாக்கிய பிரம்மாக்கள்

வயது கடந்தும்
கொஞ்சி பேச வாய்ப்பளிப்பவர்கள்
யாரென்ன சொன்னாலும்
எந்த பெயர் வைத்து அழைத்தாலும்
நீங்களும் நாங்களும்

'ஆட்டிஸம் ' குழந்தைகளுக்கு தாய்தான்

நம்மை
தாயாக்கி அழகு பார்ப்பவர்களை
சேயாக்கி அன்பு செய்வோம்.....

அன்புடன் தயாஜி

அரை மண்டையனும் கா மண்டையனும்





   90களின் தொடக்கம். எங்கள் வீடுகளின் சீடிகள் வந்திடாத காலகட்டம். ஒரு வீடியோ படத்தை வாங்கி பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பார்ப்போம்.

வேலையிடத்தில் பேசிக்கொண்டது முதல் ரேடியோ நாளிதழ்களில் கேள்விப்பட்டது வரை நன்கு கலந்து பேசி வாடகைக்கு வீடியோவை எடுப்போம். நாளொன்றுக்கு 3 ரிங்கிட் என நினைக்கிறேன். இப்போது இந்த மூன்று ரிங்கிட்டுக்கு படத்தின் கவர் கூட கிடைக்குமா என தெரியவில்லை. அப்போது ஒரு முழு வீடியோ படமே கிடைத்தது. 

    அன்றும் அப்படி வீடியோ படத்தை அப்பா கொண்டு வந்திருந்தார். என்ன படம் என்ன கதை என அதுவரை தெரிந்திருந்தவற்றை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். குழுவில் ஒருவன் திடிரென்று கதற கதற சிரித்தான். 
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சிரித்தவனின் கண்களில் நீர்வழிய மீண்டும் எங்களை பார்த்து , "ஆமா என்ன படம் பேரு சொன்ன?" என கேட்டான்.
நாங்கள்  ’அரண்மனை காவலன் ' என்றோம். சட்டென சிரிப்பை நிறுத்திவிட்டான்.

    "அப்போ படம் பேரு அரமண்ட காமண்ட இல்லையா"
அந்த செவிட்டு நண்பனை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வந்துவிடுகிறது.

ஜனவரி 06, 2016

போலி புரட்சியால் பாட்டி பலி உடன் கொஞ்சூண்டு பட்டர்……


முகநூலில் மூன்றே நாளில் பலரால் பார்க்கப்பட்ட வீடியோ காட்சி. பலரால் பார்த்த மட்டுமல்ல, பலரும் திட்டிய வீடியோ காட்சி அது எனலாம். பல புரட்சியாளர்களை சட்டென பெற்று தந்த பெருமைமிகு வீடியோ அதுவென்றால் கொஞ்சம் நக்கலாக தெரியும். தெரிந்தாலும் அந்தில் மறுப்பில்லை. முதலில் அந்த வீடியோ என்னவென்று பார்க்கலாம்.

வீடியோ காட்சி ;

வீட்டின் வரவேற்பறை. தரையில் ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறார். அருகில் இருக்கும் நாற்காலிகளில் சில பதின்ம வயதினர் இருக்கிறார்கள். ஒரு பெண் அந்த பாட்டியை துன்புறுத்துகின்றார். எல்லோரும் சிரிக்கிறார்கள். ஆளுக்கு ஒன்று பேசுகிறார்கள். அந்த பாட்டிக்கும் அந்த பெண்ணுக்கும் சண்டையாகிறது. கையில் இருக்கும் தட்டிலிருந்து எதையோ அந்த பாட்டி , பெண்ணின் மீது ஊற்றுகிறார். அப்பெண் கத்துகிறார் கூடவே சில, நாமெல்லோரும் கேட்டுப்பழகிய பேசிப்பழகிய கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறார். வீடியோ காட்சி அங்குமிங்கும் அலசுகிறது. மீண்டும் வரவேற்பறையைக்கு காட்சி வருகிறது. பாட்டியை அந்த பெண் போட்டு அடி அடியென அடிக்கிறார். அந்த பெண்ணின் குட்டை பாவாடை கொஞ்சூண்டு கிழிந்துவிட்டது கவனிக்கத்தக்கது.

நன்றி kaigal kaarathu - FB

மேற்சொன்னதுதான் அந்த வீடியோ, இதன் இரண்டாவது பகுதியிலும் இப்படிதான் பாட்டி அடிவாங்குகின்றார்.

இதனை யாரோ முகநூலில் பகிர்ந்திருக்கிறார்கள். யாரோ என்ன யாரோ அந்த வரவேற்பறையில் வீடியோ எடுத்தவரோ அல்லது அங்குள்ளவராகவோத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், யாருக்கோ பகிர்ந்து அது முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முகநூலிலும் பலரால் அந்த வீடியோ தொடர்ந்து திட்டுகளுடன் பகிரப்பட்டது. அது என்னமோ தெரியல, இந்த தொடர் பகிர்வுக்கு ’வைரல்’        ’வைரல்’-ன்னு சொல்லறாங்க. அதையுமா இப்போ தமிழில் சேர்த்துட்டாங்க. 

பகிர்தலோடு நிற்கவில்லை. வழக்கமாக அப்படியேதும் வீடியோ காட்சியோ அல்லது பிரச்சனையான காணொளி காட்சியோ பகிரப்பட்டு உரியவர்களிடம் அனுப்பப்படும். ஆனால் இம்முறை அப்படியாகவில்லை. 

விஜயகாந்தைவிட கோவமாக கண்கள் சிவந்த நிலையில் பலரும் வீடியோ செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வீடியோவில் தோன்றியிருக்கும் புரட்சியாளர்களை பற்றி இங்கு சொல்லியாக வேண்டும் என நினைக்கிறேன். ஒருவர் அவர் பேசியிருந்த வீடியோ காட்சியை எனக்கு அனுப்பி கருத்தும் கேட்டார். அவர் அனுப்பாது இருந்திருந்தால் நான் பாட்டுக்கு என் வேலையை செய்துக்கொண்டு இருந்திருப்பேன்.





அனுப்பிய வீடியோ காட்சியில் இருந்த புரட்சிமிகு வசனங்களில் சில;

“என்னால முடியலைங்க” ,”இப்படி பாட்டி அடிவாங்கறதை வீடியோ எடுக்கறியே நீயெல்லாம் ஆம்பளையா” , “நான் இதை சும்மா விடமாட்டேங்க” ,”எனக்கு அந்த பாட்டியோட அட்ரஸ் வேணும்” ,”நாளைக்கே நான் போலிஸ்க்கு போறேன்”, “நீங்க யாரா இருந்தாலும் நீங்க உங்க வீட்டு பக்கத்துல இருக்கற போலிஸ் ஸ்டேசனுக்கு போய் ரிப்போட் பண்ணுங்க”, ”எனக்கு இதை பாக்கவே முடியல, பாட்டியை அடிக்கற இதுங்களுக்கு நல்ல சாவே வராது”, இத்யாதி இத்யாதி.  மேற்கொண்டு அவர் பேசியிருந்ததை எழுத இயலவில்லை. விரல்களின் புரட்சித்தீ எனது கணினியை காயப்படுத்திடக்கூடாதென்ற முன்னெச்சரிக்கை.

நேற்று இன்னும் சில வீடியோக்கள் வந்தன.

காணொளி 1;

அந்த பாட்டி பேசுகிறார். அவரை சந்தித்து ஒருவர் நலம் விசாரிக்கிறார். பாட்டி அந்த பிள்ளைகளுடன் விளையாடியதாக சொல்கிறார். எப்போதும் இப்படிதான் விளையாடுவாராம். பெற்ற பிள்ளைகளுடன் இல்லாமல் வேறொருவர் வீட்டில் இருக்கிறாராம். அந்த பிள்ளைகளை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனிருப்பவர் மீண்டும் பிரச்சனை ஏதுமில்லையே என்கிறார். இல்லை என பாட்டி கூற காணொளி முடிகிறது.


நன்றி MY MALAYSIA (FB)
காணொளி 2;

பாட்டி தனியே தோன்றுகிறார். கைகளை கூப்பி, அந்த பிள்ளைகளுடன் இப்படிதான் தான் விளையாடுவேன். அவர்கள் சின்ன பிள்ளைகள் . இதனை பெரிதாக ஆக்க வேண்டாம். அந்த வீடியோவை அழித்திடுங்கள் . இவங்க வீட்டுலதான் நான் இப்போ இருக்கேன். அந்த பிள்ளைங்கள விட்டுடுங்க.. அந்த வீடியோவை எல்லோரும் அழிச்சிடுங்க. என மன்றாடுகிறார்.



செய்தி;
அந்த வீடியோவின் சம்பந்தப்பட்ட ஐவர் கைதாகியுள்ளார்கள் .( இது எந்த அளவு உண்மை என இதனை எழுதும் இந்த தருணம் வரை எனக்கு தெரியவில்லை.)





இது மாதிரி சம்பவங்களை நான்கு வகையாக பிரிக்க நினைக்கிறேன்.

1.   ஒரு சம்பவம் நடக்கிறது. பதிவாகிறது.
2.   அந்த சம்பவத்துக்கு கருத்து செல்கிறார்கள். கோவப்படுகிறார்கள்.
3.   சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க துடிக்கிறார்கள். வீடியோ செய்கிறார்கள்.
4.   தண்டனை கிடைத்த பின் மகிழ்ந்து எப்போதும் போல முகநூலில் கலாய்க்கிறார்கள்.

பாட்டியை அடித்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என துடித்த எவருக்கும் , ”சரி வாங்க பாட்டி நான் பார்த்துக்கறேன்” என சொல்ல வழியில்லை. ஏனெனில் அது சிற்றின்பம் போல அமைந்துவிடாது. நீண்ட நாள் தாக்குப்பிடிக்க வேண்டும். சும்மாவாச்சும் ஒரு வீடியோவில் முகத்தை காட்டி பிரச்சனையை பேசி, புகார் செய்யுங்கள் , தண்டனை கொடுங்கள் என விஜயகாந்துகளாக (இதுல விஜயகாந்தை கலாய்த்தல் வேற) தங்களை ஒரு புரட்சியாளர் போலவோ சமூக ஆர்வலர் போலவோ முகமுடி அணிந்து இரண்டு நாளில் கழட்டி வைத்துவிடலாம். 

அந்த பாட்டி சொன்னதை நினைத்துப்பார்க்கிறேன். தான் பெற்ற பிள்ளைகள் வீட்டில் நான் இப்போது இல்லை இவர்கள் வீட்டில்தான் இருக்கிறேன்  என்கிறார். இப்போது அந்த வீட்டு பிள்ளைகள் ஐந்து பேர் கைதாகியிருக்கிறார்கள் என்றால் அந்த பாட்டி இனி எங்கு போய் தங்குவார். அந்த பாட்டிக்காக வீடியோவில் பொங்கியவர்களும் அந்த பிள்ளைகளை போலிஸ் பிடிக்க படாதபாடு பட்டவர்களும் தத்தம் வீட்டு முகவரியை அந்த பாட்டிக்கு தருவதன் மூலம் வாரம் ஒருவர் வீட்டில் அந்த பாட்டி  தங்கிக்கொள்ளலாம்.

பாட்டிக்கு உதவுவதாக புரட்சி புடலங்காய்கள் எல்லாம் செய்து பாட்டிக்கு தீராத நிம்மதியிழப்பை கொடுத்துவிட்டார்கள்.






இது போதாதென்று சில பட காமிடிகள் வேறு செய்திருக்கிறார்கள். அன்று ஒரு பாட்டி வடை சுட்டாரம் இன்று இந்த பாட்டி பிளாந்த(பட்டர்) பூசிவிட்டாராம். அடப்பாவிங்களா, இனி அந்த பாட்டிக்கு தூக்கம் வரும்னு நான் நினைக்கவில்லை. 

”இப்ப தெரியுதா அந்த கிழவிய நான் ஏன் வீட்டுல சேர்க்கலைன்னு..” என்று யாரோ தன் தரப்பு நியாயம் மாதிரி எதையோ ஒன்றை சொல்லி சிரித்துக் கொள்வதாக தெரிகிறது.

இனியாவது அடுத்தவர்க்கு தண்டனை கொடுப்பதை இரண்டாம் பட்சமாக வைத்து, பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்க வழி செய்வோம். அதன் பிறகு வீடியோவில் ஹீரோவாக தோன்றிக்கொள்ளலாம்.



ஜனவரி 02, 2016

கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை (2015)

கலை இலக்கிய விழாவில் ஆற்றிய உரை

(வல்லினம் கலை இலக்கிய விழா 7-லில் எனது புத்தகமான ஒளி புகா இடங்களின் ஒலி குறித்து எழுத்தாளர் ஸ்ரீதர் ஆற்றிய உரை)
எழுத்தாளர் ஸ்ரீதர்

இந்தப்பொழுதில் உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும், உங்களோடு எழுத்து குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதிலும் மகிழ்ச்சி. வானொலி அறிவிப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர் தயாஜி அவர்கள் எழுதிய ‘ஒளிபுகா இடங்களின் ஒலி’ – கவித்துவமான தலைப்பு – வல்லினம் இணைய இதழில் அவர் தொடர்ந்து எழுதிவந்த பத்திகளில் சிறந்தவற்றைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார்கள். இது அவருடைய முதல் புத்தகம், பொதுவாக முதல் முயற்சி என்கிறபோது அதன் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் பாராட்டுவதே வழக்கம். என்றாலும் இவர் எழுத்துக்குப் புதியவரல்ல என்பதாலும் விமர்சனங்களை வரவேற்பவர் என்பதாலும் அதுகுறித்து சில விஷயங்கள் பேசலாம் என்று நினைக்கிறேன்.

பத்தி எழுத்துகளை நானும் விரும்பிப் படிப்பவன்தான். காரணம் அது சுருக்கமாக மற்றும் சுவாரசியமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறது. இன்று பத்திரிகைகளில் கட்டுரை என்று குறிப்பிடப்படுபவற்றில் பெரும்பாலானவை பத்திகள்தான். ஆனால் அதைப் ’பத்தி’ என்று குறிப்பிட மாட்டார்கள். அப்படிச் சொல்வதற்கு ஏன் தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. கட்டுரையாளர் என்று சொல்லிக் கொள்வதில் இருக்கும் மரியாதை பத்தி எழுத்தாளர் என்று சொல்வதில் இல்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ. ஆனால் உண்மையில் பத்தி எழுதுவதற்கு அதிகம் உழைப்பு தேவை. ஏனெனில் கட்டுரையை நீங்கள் எத்தனை பக்கம் வேண்டுமானாலும் நீட்டிக்கலாம், ஆனால் பத்திகளுக்கு மிகவும் குறைவான இடமே ஒதுக்கப்படும் என்கிறபோது அதற்குள் விஷயத்தைச் சொல்லிமுடிக்க நீங்கள் அதிகம் யோசிக்கவேண்டிய தேவையுள்ளது. எனவே பத்தி எழுத்துகளின் வீச்சு குறித்து உணர்ந்திருப்பவர்கள், அது என்னவென்று தெரிந்தவர்கள் தம்மைப் பெருமையாகத்தான் சொல்லிக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Columnist என்ற சொல்வது இழிவானதல்ல. ஆனால் தமிழ் இலக்கியச்சூழலில் யாரையாவது நீங்கள் பத்தி எழுத்தாளர் என்று சொன்னால்… அதை அவர்கள் விரும்புவதில்லை. எழுத்தாளர், கட்டுரையாளர் என்று திருத்துவார்கள். அல்லது குறைந்தபட்சம் இன்னாருடைய Non-Ffiction writing என்று சொல்லச்சொல்வார்கள். இந்தப் புத்தகத்துக்கான முன்னுரை எழுதும்போது, இந்தப் பத்தியெழுத்து என்பதற்கு இலக்கணம், வரைமுறை என்று ஏதாவது உண்டா என சிறிது ஆராய்ச்சியில் இறங்க வேண்டியதாயிற்று.

அந்தவகையில் இதன் வரலாறு 1920-களில் தொடங்குகிறது. இன்றைக்கு, பத்தி எழுத்து என்ற இந்த எழுத்துவகைதான், ஊடக உலகில் மிக முக்கியமான அரசியல் மற்றும் சமுதாய விஷயங்களைப் பேசுகிற, குரல் கொடுக்கிற எழுத்தாக உலகெங்கும் மாறியுள்ளது. பத்திகள் எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் பத்திகள் உண்டு என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. மேலைநாடுகளில் பத்தி எழுதுபவர்களை Columnist என்பார்கள். அவர்களை
  • Advice columnist
  • Critic
  • Editorial opinion columnist
  • Gossip columnist
  • Humor columnist
  • Food columnist
என்று பிரிப்பது வழக்கம்
Advice columnist – என்பது கேள்வி பதில்களாக சமகால வாழ்வில் உண்டாகும் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்பவர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது பிரசித்தமான ஒரு எழுத்துமுறை. உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினையை நீங்கள் கடிதமாக எழுதினால் தீர்வு சொல்வார்கள்.

Critic – என்பவர்கள் விமர்சகர்கள், கலை, இலக்கியம், கட்டுமானம், உணவு போன்ற துறைகளில் விமர்சிப்பவர்கள்.

Editorial opinion columnist – சமகால அரசியல் சமூக நிகழ்வுகளைப் பற்றிய விமர்சனம் அடங்கிய பத்திரிக்கைத் தலையங்கம் எழுதுபவர்கள்.

Gossip columnist – பிரபலங்களைப் பற்றி, அவர்களது படைப்புகள் குறித்த விமர்சனங்களை பெயர் குறிப்பிடாமல் எழுதுபவர்கள். (கிசுகிசு)

Humor columnist – சமகால நிகழ்வுகளை, அரசியலை, நபர்களை பகடியாக விமர்சிப்பது. இதில் நகைச்சுவை ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும்.

Food columnist – உணவகங்கள், உணவுமுறைகள் குறித்த எழுத்து.

இதுபோக இன்று பங்குவர்த்தகம் மற்றும் அதன் போக்கு குறித்த பத்திகளும் வெளிவருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் குஷ்வந்த் சிங், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, குல்தீப் நாயர், ஷோபா டே, கன்வால் பார்தி போன்றவர்கள் பத்தி எழுத்துகளில் உலகளவில் அறியப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாமரன், ஞாநிசங்கரன் போன்றவர்களைப் பத்தி எழுத்தாளர்களாகக் குறிப்பிடலாம். சாரு நிவேதிதா, எஸ்.ரா, சுஜாதா போன்ற எழுத்தாளர்களும் கூடப் பத்திகளை எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கு இணையத்தில் Blog, Facebook போன்றவற்றில் எழுதப்படுகிற எழுத்துகளைக்கூடப் பத்தி எழுத்துகளாகவே அடையாளம் காட்டுகிறார்கள்.

பத்தி என்பதன் விளக்கம் என்னவென்று பார்ப்போமானால்:
An article on a particular subject or by a particular writer that appears regularly in a newspaper or magazine. அதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் சார்ந்து அல்லது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரால் செய்தித்தாள் அல்லது பத்திரிகையில் தொடர்ந்து எழுதப்படும் எழுத்து. அந்த வகையில் யோசிக்கும்போது பத்தி எழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கணத்துக்குள் இல்லாமல் free form போலத் தோன்றினாலும் ஒரு எளிமையான Formula பத்திகளுக்கு உண்டு. அதை 4S என்று சொல்வார்கள்.
  1. Make it short – அளவு – பொதுவாக ஒரு 1000 வார்த்தைகளுக்குள் சொல்லி முடிக்கவேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் இன்னமும் சிறப்பு.
  2. Make it simple – எளிமை – வாசகனின் அறிவுப்பரப்பு குறித்த தெளிவுடன் இருத்தல், அவனுக்குப் புரிகிற மொழியில், புரியக்கூடிய விஷயங்களை மட்டுமே பேசுவது.
  3. Make it sound – தெளிவு – உங்கள் எழுத்து உங்களுடைய தரப்பைத் தெளிவாகப் பேசவேண்டும். உங்களுடைய கருத்துகளை தெளிவாக எடுத்து வையுங்கள்.
  4. Make it sing – தனித்தன்மை – பொருத்தமான சொற்களைப் பயன்படுத்துவது, தனித்தன்மையான வாக்கிய அமைப்புகளை உருவாக்குவது. உங்கள் எழுத்து மற்றவர்களிடமிருந்து தனியாகத் தெரியும்படி அமைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு நல்ல பத்தியை எழுதவும் அடையாளம் காணவும் இக்குறிப்புகள் உதவும். பத்திகள் கட்டுரையைப் போலவே ஒரு ஆரம்பம் அதாவது முன்னுரை மற்றும் உடல்பகுதி, முடிவுரை என்று மூன்று விதமாக பகுக்கக் கூடியதாக இருக்கும். பத்திகளில் தன்னிலை வாக்கியங்கள் குறைவாக இருக்கவேண்டும், அடிக்கடி எழுதப்படக்கூடாது, அப்படி எழுதினால் அது சுயஅனுபவக் கட்டுரைகள் அதாவது Anecdote என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள், அந்த வகைமைக்குள் வந்துவிடும். எனவே சுய அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுவோமானால் அதைப் பத்திகள் என்று சொல்லக்கூடாது. ஒரு நிகழ்வில் ஏதேனும் ஒரு சார்புநிலையில் இருந்து எழுதப்பட வேண்டும். இவ்வளவுதான் பத்தி என்பதன் இலக்கணம்.

மேலும் பத்தி எழுதுபவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்…
  1. பத்தி எழுதுபவர்கள் ஒரு நிகழ்வில் ஏதேனும் தரப்பைத் தேர்ந்தெடுத்து   எழுதுவது அவசியம், மதில்மேல் பூனை நிலை உதவாது.
  2. தம்முடைய தரப்பில் கவனம் செலுத்தவேண்டும்.
  3. அதேசமயம் எதிர்தரப்பினர் வைக்கக்கூடிய வாதங்கள் குறித்தும் யோசிக்க வேண்டும்.
  4. ஒப்பீடுகளோடு கருத்தை விளக்குவது எளிதில் புரியவைக்கும்.
  5. தனி மனிதரையோ, அரசியல் சமூக நிகழ்வுகளையோ அல்லது சூழலையோ   விமர்சிப்பதில் தவறில்லை, தைரியமாக விமர்சிக்கவேண்டும்.
  6. எழுத்தில் எப்போதேனும் சுய அனுபவம் சேர்வதும், உள்ளூர் சமாச்சாரங்களும் பத்தியை சுவாரசியமாக்கும்.
  7. உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்கும் உண்மை நிகழ்வுகளைக் குறிப்பிடுங்கள்.
  8. களத்தில் இறங்கிச் செய்திகளை சேகரித்து அவற்றைத் தெரியப்படுத்துவது நல்ல உத்தி.
  9. உங்கள் கருத்தில் அழுத்தம் திருத்தமாக இருங்கள், மேம்போக்கான கருத்துகளை யாரும் ஒருபோதும் விரும்புவதில்லை.
  10. ஒரு சிக்கலில் வெறுமனே அதைக்குறை சொல்வதை விட்டுவிட்டு அதற்குத் தீர்வு சொல்ல முயலுங்கள். அதுதான் தேவை, குறை சொல்வது என்பது யாராலும் முடியக்கூடியதே.
இப்போது இந்த நூலைப்பற்றி…

உள்ளே இருப்பதைப் பேசுவதற்குமுன், வெளித்தோற்றத்தைப் பற்றிச் சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டும். வல்லினம் பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தும் 70-80 பக்கங்கள் மட்டுமே இருப்பது என்னைப் போன்ற கனத்த புத்தகங்களைப் பார்த்தவுடன் ஆயாசமடைபவர்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய விஷயம், சிறந்த கட்டுமானத்தோடு புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள், முன்னட்டை ஓவியங்கள் ஆகட்டும், பெரிய எழுத்துருவாகட்டும், இது வல்லினத்தின் புத்தகம் என்று தனித்த அடையாளத்துடன் பதிப்பிக்கிறார்கள். அது பாராட்டப்படவேண்டிய விஷயம்தான். வல்லினம் தொடர்ந்து இதேபோன்று தனித்தன்மையுடன் இப்பணியை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மலேசிய இலக்கியத்தில் பத்தி எழுத்துகளை முன்பே ரெ.கார்த்திகேசு எழுதியிருப்பதாக அறிகிறேன், நான் அதை வாசித்ததில்லை. வல்லினம் வெளியீடாக வந்துள்ள, ம.நவீனின் ‘கடக்க முடியாத காலம்’, யோகியின் ‘துடைக்கப்படாத ரத்தக்கறைகள்’ ஆகிய தொகுப்புகளை வாசிக்க முடிந்தது. அடுத்ததாக, தற்போது தயாஜியின் இந்தத் தொகுப்பு.

தயாஜியின் இந்தத் தொகுப்பிற்கான முன்னுரையில் சொன்னது போல இத்தொகுப்பின் மொழி, ஒரு கிராமத்துச் சொலவடை போல எளிமையைத் தன்னுள்ளே வைத்திருக்கிற மொழி. அது அவருடைய இயல்பும் கூட. அவரோடு பழகியவர்களுக்கு அது தெரியும். ஒரு கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு வரநேர்ந்த சிறுவன் ஒருவனின் குதூகலமும், ஆச்சரியமும், பயமும் ஒருங்கே கலந்த அந்த உணர்வு அவருடைய மொழியில் தெரியும். கூடவே ஒரு மெல்லிய அங்கதமும் அவருடைய மொழியில் இழையோடியிருப்பது சிறப்பானது.

நகரத்திற்கு வந்து இத்தனை வருடங்களாகியும், இந்நகரத்தோடு பல தளங்களில் தொழிற்பட்டும் தயாஜி தன்னுள் இருக்கும் அச்சிறுவனை இன்னமும் தொலைக்காமல் இருப்பதை அவருடைய அனுபவங்களை அவர் விவரிக்கும்போது தெரிந்து கொள்ளமுடிகிறது. அவருடைய எழுத்துகளை வாசிக்கையில் முதல் ஈர்ப்பு இதுவாகத்தான் இருக்கும். வெள்ளந்தியான மனதுடன் அதாவது வெகுளித்தனமாகக் கேட்கப்படும் எளிமையான கேள்விகளே எப்போதும், பதிலளிக்க முடியாத கேள்விகளாக இருக்கும். ஒரு குழந்தையின் எல்லாக் கேள்விகளுக்கும் உங்களால் நேர்மையாகப் பதிலளித்துவிட முடியாது. தயாஜியின் கேள்விகளும் அத்தகையதுதான்.

ஊரிலிருந்து வந்து உங்களுக்காக உழைக்கிற தமிழர்களை வெறுத்து ஒதுக்குகிறீர்கள், ஆனால் ஊரிலிருக்கிற, உங்களுக்காக எதுவுமே செய்யாத நடிகர்களை மட்டும் உறவென்று கொண்டாடுகிறீர்களே, ஏன்?

ஏன் இன்றைய வீடுகள் முதுபெற்றோர்கள் இல்லாமல் ஆகிவிட்டன? அவ்வீட்டிலுள்ள குழந்தைகளுக்கெல்லாம் யார் கதை சொல்வார்கள்?

விவேகானந்தரைப் பார்த்து வணங்குகின்ற உங்கள் கண்களுக்கு அதனை அடுத்துள்ள ஒரு பிரதேசமும் அங்கு போராடிக்கொண்டிருக்கும் மக்களின் நிலையும் தெரிவதில்லையே ஏன்?

வெட்டி வீசப்படும் முடியைத் திருத்திக் கொள்வதில்கூட சாதி பார்க்கும் நீங்கள் அது இல்லாதது போல் நடிக்கிறீர்களே ஏன்?

இந்தக் கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்வதை மறந்து நாம் ஒரு சௌகரியமான மனநிலையில் இருக்கிறோம். அவர் அதை ஞாபகப்படுத்தும் விதமும் அதிலிருக்கும் நியாயமும் நமக்குச் சற்று எரிச்சலூட்டும் என்றாலும் அவை கேட்கப்படவேண்டிய கேள்விகள்தான். வெளியிலிருந்து நகரங்களுக்குப் பெயர்பவர்கள் வெகுசீக்கிரமே ஒரு மனிதமற்ற விநோத குணத்துக்குள் தங்களைத் திணித்துக் கொள்வதும் – ஒட்டுமொத்த நகரமும் ஒரு கூட்டுமனம் போல ஒரேமாதிரி சிந்திப்பதையும் கவனித்து வியந்திருக்கிறேன். நகரம் மனிதர்களை இப்படி ஆக்குகிறதா? இல்லை மனிதர்கள்தான் நகரத்தை இப்படியாக்கி விட்டார்களா? எனக்குத் தெரியவில்லை. நான் நகரங்களிலிருந்து வீடு திரும்புகையில் நினைத்துக்கொள்வது; நகரம் என்பது ஒரு தனி உயிரி. அவ்விலங்கிடம் சிலரால் இணக்கமாக முடிகிறது, சிலர் வெருண்டு ஒதுங்குகிறார்கள், சிலர் வேறு வழியில்லாமல் அதனோடு உண்டு உறங்குகிறார்கள். தயாஜியும் அப்படியான சிந்தனைகளைத்தான் இக்கட்டுரைகள் மூலமாக முன்வைக்கிறார். ஒரு கிராமத்து இளைஞனான அவரால் இந்நகரத்து நியாங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தயாஜியைப் போன்ற இன்னமும் மனிதம் மிச்சமுள்ள இளைஞர்களாலேயே நகரம் முழுமையாக நரகமாகாமல் இருக்கிறது என்பேன்.

இந்தத் தொகுப்பில் சில பெண்கள் வருகிறார்கள். ‘ஊர்க்காரர்கள்’ கட்டுரையில் வரும் பூக்காரப்பெண், சன்னிலியோன் கட்டுரையில் வரும் குழந்தைகளின் தாய், பாவக்கணக்கு என்ற தலைப்பில் ஒரு திருமணமான ஆணை நம்பி வரும் விடலைப்பெண், வாசனையுள்ள அறைகள் தலைப்பில் வரும் விலைமாது. இவர்களிடத்தில் என்னால் ஒரு ஒற்றுமையைப் பார்க்க முடிந்தது. எல்லோருமே நகரத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது கையறுநிலையில் உள்ளவர்கள். நகரம்தான் அவர்களை மறைமுகமாக ஆட்டுவிக்கிறது. உங்களால் ஒருபோதும் நகரத்தை ஜெயிக்க முடியாது. இதுதான் நகரங்களுக்கான நியாயம்.

தொகுப்பிலுள்ள முக்கியமான கட்டுரையாக ‘ஒளிபுகா இடங்களின் ஒலி,’ ‘விவேகானந்தரும் விலைமாதர்களும்,’ ‘கேலிச்சித்திரமெனும் ஆயுதம்,’ ஆகிய கட்டுரைகளைக் குறிப்பிடலாம். குறிப்பாக விவேகானந்தரும் விலைமாதர்களும் என்கிற அக்கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக வரும் கடைசிக்கட்டுரையும் ஒரு சிறுகதைக்குண்டான சுவாரசியத்துடன் உள்ளதைக் கவனிக்க முடிகிறது. அவர் சிறுகதை எழுதக்கூடியவர் என்பது அறிந்த ஒன்றே. கல்குதிரையில் அவர் எழுதிய ’இன்னொரு கிளை முளைக்கிறது’ என்ற சிறுகதை நிச்சயமாக மலேசிய இலக்கியத்தில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளில் ஒன்று. அந்தவகையில் அவர் Onetime wonder ஆக இல்லாமல் அதுமாதிரியான சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே என் ஆசை.

சாமி யார்? என்ற கட்டுரையில் சிறு வயதில் அவர் சாமியாராக ஆசைப்பட்ட விஷயத்தைக் குறிப்பிடுகிறார். இன்றைய தேதியில் மரத்தடி முதல் கார்ப்பரேட் வரை சாமியார்களுக்கு இருக்கக்கூடிய செல்வாக்கும் சொல்வாக்கும் நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. இதை 15-20 வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருக்கும் தயாஜியிடம் ஏதோவொரு சக்தி இருக்க வாய்ப்பிருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது. எனக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசைதான். அதேசமயம் ’வெறும் செருப்பு’ சொல்லும் தத்துவார்த்தநிலை, அதாவது மாளாத சோகத்திலும் ‘மர்லின் மன்றோ’வை நினைக்கும் அந்தத் தத்துவார்த்த மனநிலை எத்தனை பேருக்கு வாய்க்கும் என்ற கேள்வியும் எனக்கு வருகிறது. துறவறம் மேற்கொள்வதற்கான அடிப்படைத்தகுதி அவரிடம் வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

தொகுப்பில் வெகுசில இடங்களில் தயாஜியின் எளிமையான மொழி ஒரு போதாமையாக இருக்கிறது. அதாவது அவருடைய பலமே பலவீனமாகவும் இருக்கிறது. தொடர்ந்து ஒரேகுரலில் ஒரேவிதமாக விஷயங்களைச் சொல்லிக்கொண்டு போவது Monotonous ஆகத்தோன்றுகிறதுதான். குறிப்பாக பண இலை, சாதி மயிர், கலீல் ஜிப்ரான் போன்ற கட்டுரைகளில். ஆனால் நிச்சயமாக அடுத்த தொகுப்பில் அது மாறுமென்பதும் எனக்குத் தெரியும். ஏனென்றால் தொடர்ந்து வாசித்து, தொடர்ந்து எழுதுகிறார். ஆரோக்கியமான விவாதங்களில் பங்கெடுக்கிறார் என்பதால், விரைவில் அவர் மொழி இன்னமும் வலுவானதாக மாறும். அதற்கு கல்குதிரையில் வந்த சிறுகதையே ஒரு உதாரணம். முன்னம் சொன்னது போல சொலவடை போன்ற அவருடைய எளியமொழி அதைப்போன்றே புரிந்துகொள்ள பல திறப்புகள் உள்ளதாகவும் மாறும்நாள் வெகு தொலைவில் இல்லை.


நன்றி வல்லினம் ஜனவரி 2015
வாசிக்க ; http://vallinam.com.my/version2/?p=2547

வல்லினம் நேர்காணல்

“என்னையடுத்து வேறோரு வாசகனுக்காக சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.” – தயாஜி 


 கேள்வி : சிறுகதை, கவிதை, தொடர்கதை என எழுதிக்கொண்டிருந்த நீங்கள், உங்களின் முதல் நூலாகப் பத்திகளின் தொகுப்பை வெளியிடக்காரணம் என்ன?


தயாஜி : மிகச்சரியாக நான் சொல்லவந்ததை எந்த வடிவத்தில் சொல்ல முடியுமோ, என் சக வாசகனுடன் என்னால் சுலபமாக பேச முடியுமோ அந்த வடிவில்தான் என் முதல் நூல் வரவேண்டும் என நினைக்கிறேன். பத்திகள் மூலம் என்னை அடையாளம் காட்ட நான் ஆசைப்படுகிறேன். நம் நாட்டு தமிழ்ச்சூழலில் பத்திகள் எழுதுவது குறைவு. முதன்முதலாக, பத்திகள் தொகுப்பு நூலாக வந்தது ம.நவீன் எழுதிய ‘கடக்க முடியாத காலம்’, அதனைத் தொடர்ந்து யோகியின் ‘துடைக்கப்படாத ரத்தக்கறைகள்’ தொகுப்பைச் சொல்லலாம்.

கேள்வி :  இந்நூல் குறித்து கொஞ்சம் கூறுங்கள்.

தயாஜி : தொடர்ந்து ஐந்தாண்டுகள் வல்லினம் இணைய இதழில் எழுதிய எனது பத்திகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். ஒருவேளை புத்தகத்தில் உள்ளதை இணையத்திலேயே படித்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டால், அது சாத்தியமில்லை. ஐந்தாண்டுகளில் எழுதிய 60 பத்திகளுக்குள் தேர்ந்தெடுத்ததைச் செறிவு செய்த பிறகே புத்தகமாக்குகிறோம். சில சமயம் நமது கருத்து காலத்தைத் தாண்டி நிற்பதில்லை. எழுதப்பட்ட காலத்தில் சிலாகிக்கப்பட்ட பத்திகள் இப்போது நீர்த்துப் போயுள்ளதைப் பார்க்கையில் அப்போதைக்கான மிகை உணர்ச்சி மட்டுமே அதில் இருந்தததாக உணர்கிறேன். இது தோல்வி என்றாலும் அதனைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. தேர்ந்தெடுந்த பத்திகளைச் செம்மைப்படுத்த வல்லினம் ஆசிரியர் ம.நவீன் பெரிதும் உதவினார். எழுதுகிறவருக்கு இணையாக அதனை செறிவாக்குகிறவர் உழைக்க வேண்டியுள்ளதை உணர்ந்தேன். ஒரு கருத்தை இன்னும் எவ்வளவு துல்லியமாக்கலாம்; எதனை இக்கருத்துடன் இணைத்தால் எளிமையாகும் என்பது போன்ற விபரங்களை, பத்திகளைச் செறிவாக்கும் போது கற்றுக்கொண்டேன்.

மனிதர்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஒவ்வொரு மனிதரிடம் பழகுவது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். என்னைப் பொருத்தவரை, என்னுடைய உலகம் என் வீட்டு வாசலைத் தாண்டியே இருக்கிறது. அந்த இயல்புடையவன் என்பதால்தான் நான் கலையைத் தேர்ந்தெடுக்கும்படி ஆனது. என் வயது நண்பர்களைவிட, என் வயதுக்கு மீறிய நண்பர்கள்தான் எனது பட்டியலில் அதிகம். பி.எம்.டபள்யு-க்களில் போகின்றவர்களைவிட சாலையோரத்தில் சோர்ந்துபோய் நடந்து போகிறவர்கள்தான் எனக்கு நெருக்கமானவர்களாகத் தெரிந்தார்கள். என்னால் மிகவும் சகஜமாக அவர்களுடன் பழக முடிந்தது. அவர்களுக்காகப் பேசுவதும் அவர்களிடம் பேசுவதும்தான் கலையின் வெளிப்பாடாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

ஐந்தாண்டுகள் மின்னல் பண்பலையில் அறிவிப்பாளராகப் பணியாற்றினேன். அப்போது எனது தொடர்புகள் இன்னும்  அதிகமானது. போதைப் பித்தர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், சிவப்பு விளக்குப் பெண்கள், கொலைக் குற்றவாளிகள் என சமூகக் கட்டமைப்பால் ஒதுக்கப்பட்டவர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டேன். அவர்களின் வாழ்வு குறித்துப் பதிவு செய்யவே வானொலியில் ’கண்ணாடித்துண்டுகள்’ என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து ஒலிபரப்பினேன். அதற்காக என்மீது காவல்துறையில் புகார்கூடக் கொடுத்தார்கள். இருப்பினும் சரியான நோக்கமும் தெளிவான விளக்கமும் இருந்ததாலும், வானொலி நிர்வாகத்தின் துணையிருந்ததாலும் அதனைச் சமாளிக்க முடிந்தது. அரசாங்க வானொலிக்கு என சில வரையறைகளும் விதிமுறைகளும் உண்டு. அதற்கேற்றவாறு சிலவற்றைக் குறைத்தும் சிலவற்றைச் சொல்லாமலும் விட்டோம். பின்னர் அதனை எழுதும் சூழலை உருவாக்கி மீண்டும் அந்த அனுபவத்தைப் பெற்று எழுதிய பத்திகள் இந்நூலில் உள்ளன.

நாம் வாழும் சமூகத்தில் இருட்டான பகுதிகளைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்வது போல பாசாங்கு செய்வதால் நிலமை ஒரு போதும் மாறப்போவதில்லை. அதற்கான காரணத்தைக் கண்டறிவதும் அதனோடு விவாதிப்பதும் அதைப் பதிவு செய்வதுமே எழுத்தாளனின் பணி.




கேள்வி :  ஓர் எழுத்தாளராக உங்களுக்கு உவப்பான வடிவம் எது?

தயாஜி : எனக்கு உவப்பான வடிவம் எதுவென்று என்னால் கூறிவிட முடியாது. ஏனெனில் சிறுகதை என நினைத்து எழுத ஆரம்பித்து கவிதையில் முடிந்துள்ளன. கவிதை என நினைத்து ஆரம்பித்தவை சிறுகதையில் முடிந்துள்ளன. நகைச்சுவைத் துணுக்காக நினைத்தவை பத்திகளாக வளர்ந்துள்ளன. இப்படி, வடிவங்களை முன்னமே முடிவு செய்து எழுதும் வழக்கத்தின் மீது எனக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கை இல்லை. ஏதோ ஒன்றுதான் முன்முடிவுக்கு ஏற்றார்போல அமைகிறது.

கேள்வி : துடிப்பான இளம் எழுத்தாளர்கள் பலர் வல்லினத்தில் இணைந்து பயணிக்கின்றனர். நீங்கள் வல்லினத்துடன் இணைந்து செயல்பட காரணம் என்ன?


தயாஜி : இளம் எழுத்தாளர் பழம் எழுத்தாளர் என்கிற பேதமெல்லாம் வல்லினத்தில் இல்லை. இது ஓர் இயக்கமோ நிறுவனமோ அல்ல; ஒரு குழு அவ்வளவே. அதிலும் வயதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. அ.பாண்டியன், சந்துரு, சரவண தீர்த்தா, ஸ்ரீதர்ரங்கராஜ் போன்றவர்கள் நடுத்தர வயதுள்ளவர்கள் என்றாலும் அவர்களின் சிந்தனையாற்றல் தற்போதைய இளம் சமூகத்தைவிட துடிப்பாக இருக்கிறது. எழுதுகிறவர்கள் மட்டுமின்றி, மாற்றுச்சிந்தனையின் தேவை உணர்ந்தவர்கள் அனைவருமே வல்லினத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் எண்பது வயதை நெருங்கும் ஒருவர் என்னை அழைத்திருந்தார். அம்மாத வல்லின இணையப் பக்கத்தில் வந்திருக்கும் கட்டுரைகள் நன்றாக இருப்பதைக் குறித்துப் பேசினார். தொடர்ந்து, வல்லினம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்குத் தவறாது கலந்துகொள்ளப் போவதாகவும் கூறினார். வல்லினம் வயது பேதங்களுக்கு அப்பால் சென்று நாட்களாகிவிட்டது.
ூலை பெற்றுக்கொள்கிறார் எழத்ாளர் ஸ்ரீதர்

என்னிடம் சில கேள்விகளும் சில குழப்பங்களும் இருக்கின்றன. நான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சமூகம் எனக்கு ஒரு விதத்தில் அச்சமூட்டுவதாக இருக்கிறது. அதிகாரத்தின் கால்கள் எப்போது வேண்டுமானாலும் சாமான்யனின் தலையை அழுத்தலாம். ஊடகங்கள் நினைத்தால், ஒன்றை சாகும்வரை நம்பவைக்கலாம். பத்திரிகைகள் நடப்புச் சூழலை மறைத்துவிடலாம். இப்படி என்னை சுற்றிலும் நடந்துக் கொண்டிருக்கும் குழப்பங்களுக்குக் கேட்கவேண்டிய கேள்விகளிலிருந்து என் குரல் ஒரு எல்லையைத் தாண்டி செல்லவில்லை. காரணம் என்னமோ எளிமையானதுதான். ஆடையற்றவன் ஊரில் ஆடையணிந்தவன் பைத்தியம். அப்படி, ஒற்றை மனிதனாகக் குரலெழுப்பி, விரக்திக்குட்பட்டு ஊமையானவர்களின் எண்ணிக்கை எனக்கும் நன்றாகவே தெரியும். ‘அட போப்பா நம்ம சொன்னா எவன் கேட்கறான், பட்டாதான் திருந்துவானுங்க நம்ம செத்த பிறகுதான் அன்னிக்கே சொன்னாரேன்னு வருந்துவானுங்க..’ இப்படி நானும் விரக்தியிலேயே மடிந்து போக விரும்பவில்லை. என்னுடைய கேள்விகளுக்கு அறிவு சார்ந்த பதில்கள் போதவில்லை. என் குழப்பங்களுக்கு என் படிப்பறிவில் இருந்தும் என் அனுபவங்களில் இருந்தும் தெளிவு சரியாக அமையவில்லை. குழு என்பதன் பலம் அப்போதுதான் புரிந்தது. வெவ்வேறு துறை சார்த்தவர்கள். வெவ்வேறு அனுபவங்கள் கொண்டவர்கள். அவர்களின் வெவ்வேறான பார்வை. ஆனாலும் அவர்கள் நேர்மையும் மாற்றுசிந்தனையும் என்னை அவர்களுடன் இணைக்க வழிவகுத்தது.

கேள்வி : உங்கள் நூல் தமிழகப் பதிப்பகத்துடன் இணைந்து உருவாகியுள்ளதாக அறிகிறோம். ஏன் இந்த முயற்சி?

தயாஜி : இதுபோன்ற முயற்சிகள் முக்கியமானவை. எத்தனை நாள்தான் தமிழகத்தில் இருந்து இலக்கியங்களை இறக்குமதி மட்டும் செய்வது. ஏற்றுமதிகளைச் செய்ய வேண்டாமா? நம் நாட்டிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். இங்கும் படைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனை நாம்தான் வெளிக்கொணர வேண்டும். ஒரு சமயத்தில் அம்மாவின் கைபிடித்து நடந்த நாம், பின் நமக்கான நடையைக் கண்டறிந்து  நடந்துகாட்டுவது போலத்தான். ஒரு சமயத்தில் நமக்கு தமிழகத்தில் இருந்து இறக்குமதிகள் தேவையாக இருந்தன. இப்போது நாம் நமக்கான நடையைக் கற்றுக்கொண்டு விட்டோம். நாம் நடந்து காட்டவேண்டும். உடனே தமிழகத்தையோ அங்கிருக்கும் படைப்பாளர்களையோ குறைத்துப் பேசுவதாகப் பொருள் கொள்ளக்கூடாது. தமிழகப் பதிப்பகத்துடன் இணைந்து, புத்தகம் வெளியிடப்படுவதால், தமிழகத்தில் இருக்கும் வாசகர்களுக்கும் நமது புத்தகம் சென்று சேர்வதற்கான சூழல் அமைகிறது. இப்பகிர்வு இப்போது அவசியம் எனக் கருதுகிறேன். இந்த இணைவால் வல்லினம் பதிப்பக நூல்கள் அங்கு நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளிலும் இடம்பெறும். பரந்த வாசகப் பரப்பை அடைவதற்கான வல்லினத்தின் முயற்சி இது.


கேள்வி : தொடர்ந்து எவ்வகையான ஆக்கங்களைத் தர ஆர்வம் கொண்டுள்ளீர்கள்?

தயாஜி : புத்தகம் வெளியீடு செய்வது எனது நீண்ட நாளைய கனவு. காந்தி சொன்னதாகச் சொல்லுவார்கள். இவ்வுலகில் நிலைத்து நிற்க வேண்டுமானால், மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும். ஒன்று, வீடு கட்டிவைப்பது. இரண்டு, வாரிசுகளை உருவாக்கிவிடுவது. மூன்று, புத்தகம் எழுதுவது. முதல் இரண்டின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.  அவ்வப்போது செத்துவிடுவோமா என்ற பயம் இருந்தாலும், நான் சாகாமல் இருக்கவே விரும்புகிறேன். அதற்கும் சேர்த்துதான் எழுதுகிறேன். என்னிடம் சொல்லவேண்டிய கதைகள் ஏராளமாக உள்ளன. இம்முறை நாவல் ஒன்றை முயற்சிக்கலாம் என ஆசை உள்ளது. அதனுடன் இங்குள்ள திரைப்படங்களுக்குக் கதை வசனம், பாடல் எழுதுவதும் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி : இன்று உங்கள் வாசிப்பு எவ்வகையில் உள்ளது. அதன் பரிணாமம் குறித்துக் கொஞ்சம் சொல்லுங்கள்?

தயாஜி : ஆச்சர்யமாக உள்ளது. எப்படியெல்லாம் கதைகள் சொல்லப்படுகின்றன. எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள். எதையெல்லாம் சகித்து, சக மனிதனால் மிதிபட்டு வாழவேண்டியுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள முதல் படியாக இருப்பது வாசிப்புதான். தொடக்கத்தில் என் தனிமையின் சுவாரஷ்யத்துக்காகப் படிக்கத்தொடங்கியவன் இன்று என் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே வாசிப்பை ஏற்றுக்கொண்டேன். நல்ல புத்தகமாக படுவதை உடனே வாங்கி வைத்துவிடுவது பழக்கமாகிவிட்டது. என்னால் வாசித்து முடிக்கமுடியாமல் போகலாம். என்னையடுத்து வேறோரு வாசகனுக்காகவாவது சில புத்தகங்களை முன்னமே நான் வாங்கி வைத்திருக்கிறேன்.

கேள்வி : அறிவிப்பாளர் தயாஜி; எழுத்தாளர் தயாஜி யார் உங்களுக்குப் பிடித்தவர்?

யாழின் இரண்டாவது வெளியீடு 2016
தயாஜி : இன்னும் நினைவு இருக்கிறது. ஒருமுறை இப்படி எழுதியிருந்தேன். ’அறிவிப்பு பணத்திற்கு; எழுத்து மனத்திற்கு’; உடனே விசாரிக்கப்பட்டேன். தொழில் என்பது வேறு. விருப்பம் என்பது வேறு. அறிவிப்புத் துறை எனக்குப் பிடித்தமான துறையாக இருந்தாலும் அப்போதைக்கு எனக்கு வாழ்வாதாரமாக இருந்தது அறிவிப்பு ஒன்றுதான். அதன் மூலம்தான் வருவாய் வந்தது. இப்படி நினைத்துப் பார்க்கிறேன். அறிவிப்பாளர் தயாஜியை எல்லோருக்கும் பிடிக்கும். எழுத்தாளர் தயாஜியை பலருக்கும் பிடிப்பதில்லை. அறிவிப்பாளர் சமூகம் விரும்புவதைப் பேசுபவர். எழுத்தாளர் தான் விரும்புவதைப் பேசுபவர்.

கேள்வி : செயல்பாட்டு ரீதியில் உங்கள் அடுத்தடுத்த முயற்சிகள் என்ன?
 

யாழின் மல் வெளியு 2015

 
தயாஜி :’யாழ்’ பதிப்பகத்தின் மூலம் மாணவ சமூகத்துடனான தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். இப்போதைய சூழலில், தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் இருந்துதான் எதையும் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அவர்கள்தான் நாளை வாசகர்களாக எழுத்தாளர்களாக சிந்தனையாளர்களாக இச்சமூகத்தில் வெளிவரப்போகிறார்கள். அவர்களை கவனிக்கவேண்டும். அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்களைத் தொடர்ந்து தமிழ்ச்சூழலைப் புரிந்துக்கொள்ள வைக்கவேண்டும். வல்லினத்தின் இணை நிறுவனமாக ‘யாழ் பதிப்பகம்’ தொடங்கப்பட்டுள்ளது. அது வல்லினத்தின், மாணவர்களுக்கான முயற்சி.. அதில் நானும் ஒருவனாக இணைந்து என் பங்குக்குச் செய்யவேண்டியதை செய்வதையே எனது செயல்பாடாக நினைக்கிறேன். மிக விரைவில் அதன் புதிய திட்டங்களை அறிவிப்பேன்.

ன்றி 2016 ஜி வல்லினம் 

http://vallinam.com.my/version2/?p=2479

 

 

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்