பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 14, 2015

பொம்மைகளின் வன்முறை










   வானொலியில் அறிவிப்பாளனாகப் பணியாற்றி மூன்று ஆண்டுகள் கடந்திருந்த சமயம் அது.  பலதரபட்ட மக்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. வாழ்வில் உயர்ந்த நிலையில் வாழ்பவர் முதல் அதபாதாளத்தில் இருப்பவர்கள் வரை பல முகங்கள். தந்தையர் தினத்தையொட்டி வானொலி நேயர்களுக்கு நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்தோம். சக நண்பர்களிடமும் ஆளுக்கு ஒரு பணி எனக் கொடுக்கப்பட்டது.

   
என் முகமெல்லாம் சாயம் பூசி உடல் முழுக்க வண்ணக்கலவையில் ஆடை அணிந்து வழக்கத்திற்கு மாறாக குதித்தும் ஆடிக்கொண்டும் இருக்கும் கோமாளி வேடம் வழங்கப்பட்டது. வழக்கமாகப் பல குரல்களில் பேசும் எனக்கு இப்பணி புதுமையாக இருந்தது. இத்துறையைப் பலகாலமாகச் செய்யும் ஒருவர் அப்போது எனக்குத் துணையிருந்தார். 'கோமாளியாவதற்கு மீசை, தாடி எல்லாம் மளித்து வளவள முகத்தோடு இருத்தல் வேண்டும். அதுதான் அரிதாரம் பூச அவசியம்.' னக் குறிப்புகள் கொடுத்துக்கொண்டிருந்தார். மழிக்கப்பட்ட அவரின் முகத்திற்குப் பின்னால் இருக்கும் வியாபார உத்தி அப்போதுதான் புரிந்தது.

  
சில வாரங்களில் எனக்கு பதிவு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேரம் அது. மீசை இல்லாமல் போனால் வருங்கால வீட்டம்மாவுக்கே என்னை அடையாளம் தெரியாமல் போய்விடும். ஆதலால் மாற்று வழியை யோசிக்கலானேன். கோமாளியின் வேலை  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சிப்படுத்துவதுதானே. அதை செய்துவிட்டால் முகத்தில் முடி எடுப்பதும் அவசியமற்றதாகிவிடும்.

  
யோசித்ததில் ஒரு சிந்தனைத் தோன்றியது. முகத்தில் சாயாம் பூசாமல், சாயம் பூசப்பட்ட ஒரு பொம்மை முகமூடியும் அதன் உடையையும் அணிய முடிவெடுத்தேன். வாத்து உருவில் இருந்த பொம்மை உருவத்தினுள் என்னை புகுத்தவேண்டும். எப்படியும் என் குரலுக்கும் உணர்ச்சிகளைக் காட்டும் முகத்திற்கும் வேலை இல்லை. முழுக்க முழுக்க வாத்தாக நான் மாறி இடுப்பை ஆட்டியபடி நடந்து, கால்களை அகல விரித்து , கைகளை அடிக்கடி தூக்கி காட்ட வேண்டும். மீசையும் தாடியும் தப்பித்தது.

 
எல்லாம் தயார். வழக்கம் போல் நிகழ்ச்சி தொடங்கியது. என்னை மறைத்துக்கொண்டு வாத்தாக மாறி தயாராகி வந்திருந்தேன்.

  
வாத்து நடந்து வரும்போது சிறுவர் முதல் பெரியவர் வரை குதூகலப் பார்வைப் பார்க்கத் தவறவில்லை. அதன் பிறகு நடந்ததுதான் நான் நினைத்துப்பார்க்காதது.

  
குழந்தைகளில் செயல்கள் விசித்திரமாகத்தான் இருந்தன. வழக்கமாக அவர்கள் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் உருவம் கண் முன்னே வந்ததும் சிலர் அழுதனர் , சிலர் பிரமித்து ரசித்தனர். இதையெல்லாம் தாண்டி தாங்கள் ரசித்து சிரித்து பார்த்த கார்ட்டூன் கதாபாத்திரத்தை அடிப்பதும் வயிற்றில் பலம் கொண்டு குத்துவதும் பின்னால் உதைப்பதும் என அவர் சேஷ்டைகள் தொடர்ந்தன.


   ‘
ஆளவந்தான் திரையில் ஒரு காட்சி. புதுவிதமாகச் சண்டையிட்ட மனவளர்ச்சி குன்றிய நந்து பாத்திரத்திடம்எப்படிச் சண்டை போட கற்றுக்கொண்டாய்என மருத்துவர் கேள்வி கேட்பார். அதற்கு நந்து சொல்லும் பதில் இதுஎல்லா குழந்தைகள் போலவும் கார்ட்டூனின் இருந்துதான் டாக்டர்”. கைத்தட்டி குழந்தைகள் சிரித்துப் பார்க்கும் கார்ட்டூன், அவர்கள் மனதில் வன்முறையையும் விதைக்கிறது என உணரத்தொடங்கினேன்.


  
அத்தனை வலியிலும் நான் சிரித்துக்கொண்டிருப்பதாய் காட்டியது அந்த முகமுடி. அடையாளம் தொலைத்தால் மட்டுமே உணர்ச்சிவசப்படுவதிலிருந்து மீள முடியுமோ என்னமோ?

 
குறிப்பு : வலிகளுக்கு இடையில் கொஞ்சம் நிம்மதிக்குக் காரணம் சில பெண்கள். பெண்கள் மட்டுமே கடைசிவரை குதூகலத்துடன் இருந்தார்கள். என்னுடன் புகைப்படம் எடுப்பதும் கைகொடுப்பதும் என தொடர்ந்தார்கள். இளவயது பெண்கள் மட்டுமல்ல வயோதிகப் பெண்களும் அதில் அடக்கம். என்ன செய்வது சிலர்  பொம்மையை உயிருக்கு உயிராய் நேசிப்பார்கள். உண்மையை ஏற்றுக் கொள்ளுவதில்  அவ்வளவாக மனம் வாய்த்திடாது.


Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்