பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 20, 2012

பயணிப்பவனின் பக்கம் 17

பேய்





தொடர்ந்து, ஜெயமோகனின் புத்தகங்களை வாசித்து வருகிறேன். அவை, ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ , ‘புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்’, ‘மேற்குச்சாளரம் - சில இலக்கிய நூல்கள்’, ‘ஆழ்நதியைத் தேடி’, ‘வாழ்விலே ஒரு முறை - அனுபவக் கதைகள்’.

சமகால எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளும் அவர்களின் படைப்புகளையும் அறிய முடிந்தது. அதோடு நில்லாமல், என்னால் சிலரிடம் விவாதிக்கவும் முடிகிறது. இன்னும் சொல்லப் போனால் எதிர்வினையாற்றுகிறேன். வெறுமனே ஜெமோ-வின் புத்தகங்கள்தான காரணம் என சொல்லவில்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் குழுவும் தொடரும் என் வாசிப்பும்தான்.

இப்போது வாசிக்க ஆரம்பித்திருப்பது, ஜெயமோகனின் ‘நிழல்வெளிக் கதைகள்’. இவை பத்து பேய்க்கதைகளின் தொகுப்பு. இதனை படிக்கும் முன்பே இதுநாள் வரை நான் படித்துவந்த ஆவி, அமானுஷ்ய,பேய்கதைகள் என்னை சூழ ஆரம்பித்தன. ஏன் படித்தேன் என தெரியாமலேயே படித்தக் கதைகள். புத்தகத்தில் வெட்டி ஒட்டியக் கதைகள். வரிசையாக இப்படி பேய் கதைகளைப் படித்ததின் வழி, அதன் உள்ளடக்கம் தெரியவந்தன.

வெள்ளை நிற பெண் பேய். எப்போதும் தப்புத்தவறுகள் செய்யும் ஆண். பலிவாங்கும் படலம், வேப்பில்லை, விபூதி, நம்பூதிரி, இரவு பன்னிரெண்டு மணி இப்படி வழக்கமானதாகவே இருக்கின்றன. இவையெல்லாம் மிகைப்படுத்தபட்டதாகவே தெரிகிறது. பாவம் பேய்கள்!

பேய் இருக்கிறதா இல்லையா என்கிற வாதத்திற்கு எனக்கு நேரமில்லை, கடவுள் கொள்கை போல அதுவும் கேள்விக்குட்பட்டவைதான். பதின்ம வயதில் கேட்ட, ஒருவகையில் நான் அனுபவைத்த சில அமானுஷ்ய சம்பவங்கள் இன்னமும் என்னிடம் எதையோ சொல்ல முயற்சிக்கின்றன. எப்போது அவை எனக்கு பிடிபடும் என தெரியவில்லை. அப்படித்தான் இறந்து போன என் சித்தியின் மரணம் என்னை துரத்திக் கொண்டே வருகிறது. எத்தனையோ ஆண்டுகளாக!

பேய் பிடித்ததாகக் கூறி ஆளுக்கு ஆள் அடித்த வேப்பிலை, துடைப்ப அடியை வாங்கியும் என் சித்தி சிரித்துக்கொண்டிருந்தது, திகில்-தான் அப்போது. வயிற்றில் கரு இருந்ததும் தெரியவில்லை அவருக்கும் சித்தப்பாவிற்கும். மரணத்தின் காரணம் தெளிவில்லாமல் இருந்தாலும் வயிற்று கருவும் இறந்திருந்தது தெளிவானது.

எப்போதும் என்னை கிண்டல் செய்பவர் அவர். பேய்பிடித்ததாகக் கூறப்பட்ட தினங்களும் பள்ளி விடுமுறையும் ஒன்றாய் அமைந்ததால், நான் அவர் வீட்டில் தங்கினேன். வழக்கமான செயல்களில் எந்த பாதிப்பும் இருக்கவில்லை. ஜோக் சொல்வது, கோவப்படுவது, சமைப்பது எதிலும் சித்தி, அவராகவே இருந்தார். ஆனால், அவர் தனிமையில் அமர்ந்திருக்கும் சமயத்தில் மட்டும், யாருடனோ அவர் பேசுவதாக இருந்தது. வானைத்தைப் பார்ப்பது, விரல் நீட்டி அழைப்பது, தானே சிரிப்பது.

எதிரில் யாரும் இல்லாமல் இருக்கும் போது யாருடன் சித்தி பேசியிருப்பார். அதற்கு ஏன் பேய் பிடித்ததாய் பெயர்.

ஒருவேளை அவர் எழுத்தாளராக இருந்திருந்தால், எல்லாவற்றையும் எழுதியிருப்பாரோ என சந்தேகிக்கிறேன். நானும் அப்படித்தான். சித்தி ஏன் யாருமில்லாத பொழுதை தேர்ந்தெடுத்திருந்தார். யாருடன் சிரிக்கிறார். யாராக தன்னை நினைக்கிறார் என்பதே யாருக்கும் புரியவில்லை. இந்த யாருக்கும் என்பது மருத்துவர்களுக்கும்.

எத்தனையோ மாத்திரைகள். பயனில்லை. தொடர்வதற்கு பணமும் இல்லை.

முதல் நாள் ஏதேதோ எண்ணங்களுடனும் எதிர்ப்பார்ப்புகளுடனும்தான் சித்தியுடன் தங்கினேன். சித்தப்பாவிற்கு இரவு வேலை. என்னை வீரனாக நினைத்து என்னுடனே தானும் இருக்கும் சித்தியின் மகன். கால் சட்டைப்பையில் எப்போதும் இருக்கும் விபூதி பொட்டலம் யாருக்கும் தெரியவில்லை.

மருந்தாலும் மருத்துவராலும் ஆகாதென முடிவானது. சாமியார்கள் அழைக்கப்பட்டார்கள். தமிழ் சாமி முதல் மலாய் போமோ வரை சித்தியுடன் உரையாடிச் சென்றார்கள். ஒருமுறை போமோ சித்தியை அடைப்பதற்கு துடைப்பத்தை கேட்டபோது, சித்தப்பாவே எடுத்துக் கொடுத்தார். ஆனாலும் சித்தி பட்ட சித்திரவதைக்கு எல்லாம் சாமிகளும் ஆசாமிகளும்தான் காரணம். நிச்சயம் சித்தியின் மரணம் கேள்விக்குட்பட்டதுதான். யாரைத்தான் கேட்பது?

தோட்டத்தில், இருக்கின்ற பொழுதுகளில் ஒவ்வொரு வெள்ளியும் பூஜைக்கு செல்வது வழக்கம். அங்கே கடவுள் முதல் கண்டகண்ட விசயங்களை பேச முடியும் என்பதால் செல்வதை வழக்கமாக்கியிருந்தேன். அந்த வீடு முழுவதும் ஆன்மிக புத்தகங்கள், சொற்பொழிவு கேசட்டுகள் என இருக்கும். அதனாலேயே அவரை எனக்கு பிடித்துப்போனது. அவரை நான் ‘சாமி’ என்றே அழைத்தேன். ஆரம்பத்தில் இருந்து சடை முடியும், முகம் முழுக்க விபூதியும் இருந்ததால் அவரை எல்லோரும் ‘சாமியார்’ என்றே அழைத்தார்கள். அழைக்கப்பட்டாரா அல்லது கேலிக்குட்பட்டாரா என தெரியவில்லை. சமய கேள்வியை முன்வைக்கும் சமயத்தில் அதற்கான பதிலும் மேற்கோளாக சில புத்தகங்களையும் காட்டுவார். பெறும்பாலும் அவர் வீட்டிலேயே இருப்பது வழக்கம்.

அப்படி ஒருமுறை பூஜையில் இருக்கும் போது சிலரால் அழைக்கப்பட்டார். நானும் வெற்று உடம்பில் வேட்டியுடன் சில நண்பர்கள் படை சூல அவருடன் வெளியில் சென்றேன். பதட்டமான குரலில் ஆணும் பெண்ணும் எங்கள் முன் நின்றார்கள். உடன் எதையோ வெறித்துப் பார்த்தவாரு ஒரு இளைஞன்.

விசயம் இதுதான். இளைஞனுக்கு பேய் பிடித்துவிட்டதாம். அடுத்த வாரம் கல்யாணமாம். தட்டில் விபூதியுடன் ‘சாமி’ அந்த இளைஞனின் தலைமுடியை இடக்கையால் பிடித்தார். தட்டு கைமாறியது. ஏதோ முனங்கினார் அல்லது ஜெபித்தார். அப்போதுதான் தெரிந்தது, ‘சாமி’-க்கு பேய் ஓட்டுவதும் ஆன்மிக ஈடுபாட்டில் ஒன்றுதான்.

அந்த இளைஞன் பெண் குரலில் பேசினான். பசிப்பதாகவும், இந்த இளைஞன் அழகன் எனவும் குரலில் ஒலித்தது. பலகுரலில் பேசிப்பழகிய என்னாலும் இது நாள் வரை அப்படி சுதிசுத்தமாக பெண்குரலில் பேசுவதென்பது இயலாத ஒன்று.

பேயும் காத்து சேட்டையும் தத்தம் இருப்பை என் மனதில் உறுதி செய்தன. அந்த வயதில் கேள்விகளைவிட பதில்களே குழப்பமாக இருந்தன எனக்கு.

சில நாள்களின் இடைவேளையில், அடிக்கடி பேய் பிடித்து மயங்கி விழும் மாணவன் ஒருவனை சந்தித்தேன் உடன் ‘சாமி’யும். ஆனால் அவரால் அந்த மாணவனை குணமாக்க முடியவில்லை. ஒரு முறை விபூதி அடிக்கப்பட்ட அந்த மாணவன் அவரையே வெறுத்துப் பார்த்தான். நான் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தேன். மாணவனைப் பார்த்து அவர் சிரித்தார். மாணவனும் சிரித்தான். இது பேயெல்லாம் கிடையாது ஏதாவது மருத்துவரைப் பாருங்கள் என்றான்.

இரண்டுக்கும் இடைபட்ட நூலிழை எனக்கு பிடிபடவில்லை. அதன் சூட்சுமம் தெரிந்தும் தெரியாமலும் பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். இவர்களைப் போலவே இன்னொரு சாராரும் இருப்பதை கோலாலும்பூருக்கு வந்த பின்னர் தெரிந்துக் கொண்டேன். உண்மையில் எங்கெங்கிருந்தோ தலைநகர் வரும் எங்களுக்கு எத்தனையெத்தனை பாடங்கள் படிப்பினைகள் உடன் ஏமாற்றங்கள்!

அப்படியொருவரை அறிமுகம் செய்யவா...?

ஏன் இந்த வேலை என நானே என்னைக் கேட்கிறேன். யாராது இப்படி செய்துதான் ஆகவேண்டும். இல்லையென்றால், ஜெயமோகனையும், எஸ்.ராமகிருஷ்ணனையும் சேரன் என்கிற சினிமா பிம்பத்தில் வைத்து பார்ப்பவர்கள் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்.

கடவுள் கொள்கை என்பது கேலிக்கூத்து. சமயம் என்பது சாப்பாட்டிற்கு வழியற்றது. இப்படியாகக் கூறிக் கொண்டு வீட்டு மூலையில் படிக கல் சிவலிங்கத்தை வைத்திருக்கிறார்கள். யாருமற்ற பொழுதில் பூஜிக்கிறார்கள். இவர்களின் கொள்கை என்பது, ‘ஊர் மெச்ச ஓட்டுவோம் தேரை’ என்பதுதான். ஆனால் இவர் பின்னால் விபரம் தெரியாதவர்கள் இருப்பதுதான் பாவம்.

இன்னொரு உதாரணமும் உண்டு, எழுத்தாளர்கள் என்ற போர்வையில் ஊரைச்சுற்றி, போட்டோ பிடித்து, பேஸ்புக்கில் பகிர்ந்து, ஊரை ஏமாற்றுகின்றவர்கள். இவர்களுக்கு தெரிந்த நவீன எழுத்தாளர்கள் பட்டியலில் புதிதாக வந்திருப்பவர் இயக்குனர் சேரன். இப்போதே இப்படியென்றான் இதற்கு முன் குறித்து ஏன் சொல்ல வேண்டும். பேய் உண்டா இல்லையா என்ற கேள்வியை சற்று நேரம் ஒதுக்கி விட்டு, இந்த வகையினரை எழுத்து வேப்பிலையால் வேட்டையாடும் களம் இங்கே ஆரம்பமாகியுள்ளது.


நன்றி
இதழ் 41
மே 2012

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்