பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 20, 2010

நானும் மகான் அல்ல.....


எங்கள் திருமணம் ‘காதலாகி கல்யாணத்தில் முடிந்தது’. இந்த வாக்கியம் எல்லோர் வாழ்விலும் வந்து போகிற சாதாரண ஒன்றாக இருக்கலாம். ஆனால் எங்களை பொருத்தவரை இந்த வாக்கியத்தின் மூலத்தைக் கேட்டால்..... சொல்லச்சொல்ல இனிக்கக் கூடியது. பள்ளிப்பருவம்தான் அவளை எனக்கு அறிமுகம் செய்தது. காலையில் நிற்கும் வரிசையிலோ, உணவு உண்ணும் போதோ, திடலில் விளையாடும் போதோ ஒரு சராசரி சந்திப்பாக அல்லாமல் நான் கோவிலாக கருதும் பள்ளி நூல்நிலையத்தில்தான் எங்களின் சந்திப்பு அமைந்தது.

வழக்கம்போல் காலணியை கழட்டி அதை ஒரு மறைவிடம் தேடி வைத்து, காலுறை ஓட்டையை எப்படியோ மறைத்து நூல்நிலையம் புகுந்தேன். வழக்கம் போல் முதல் அடுக்கு புத்தகங்களை கடந்து மூன்றாவது அடுக்குக்குச் சென்றேன்.

அட்டைகள் கிழிந்த நிலையில் சில புத்தகங்களும் ,அட்டைகளே இல்லாத நிலையில் சில புத்தகங்களும் இருந்தன. அதில் கடந்தமுறை நான் படித்து மறைத்து வைத்த புத்தகம் ஒன்று பத்திரமாக இருந்தது, யார் கையும் படாமல். புத்தகத்தை எடுத்ததும் நான் மடித்த இடத்தை ஒரு முறை சரி பார்த்தேன். அப்பாடா நிம்மதி....

நாற்காலியில் அமர்ந்து படிக்கத்தொடங்கினேன். என் அருகில் அமர்ந்தாள் வகுப்புத் தோழி சித்தி பாத்திமா, அவளின் கைபேசியை என்னிடம் கொடுத்து வீட்டிற்கு பொகும் போது கொடுக்கச் சொன்னாள். அன்று வகுப்பில் திடிர் சோதனை நடக்கும் என அவளது தோழி கொடுத்த உடனடித் தகவலால் இந்த ஏற்பாடு. நானும் வாங்கி வைத்து கொண்டேன்.

இதை யாராவது கவனித்தார்களா என கண்களால் தேடினேன். மீண்டும் படிக்கத்தொடங்கிய போது என்னை அறியாமலேயே என் எதிரில் பார்த்தேன். தன் இடது கையால் காதோரத்தில் முடியைச் சொருகி, கண் சிமிட்டியபடி என்னை மின்னல் பார்வையில் பார்த்தாள். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. ஆனால் அவளை இதற்கு முன் நான் பார்த்திருக்கின்றேன்.

எங்கே....?

இருங்கள் யோசிக்கிறேன்....

ம்.....ஆம் நினைவுக்கு வந்துவிட்டது. சில தினங்களுக்கு முன் இவளை எங்கள் தோட்டபுற கோவிலில் சந்தித்திருக்கிறேன், நிச்சயம் இவள்தான்.

முதலில் ‘புனிதக்கல்’ இருக்குமிடத்தில் சந்திப்பு அடுத்து ‘புத்தகச்சொல்’ இருக்கும் இடத்தில் மறு சந்திப்பு. அந்த மின்னல் பார்வை, காதோரம் சுருண்ட முடி, கூரான மூக்கு, ஊடுருவும் பார்வை.... இன்னும் எவ்வளவோ சொல்லலாம். இனி அதற்கெல்லாம் அவசியமில்லை. எங்கள் காதலுக்கு தூதாக இருந்தவர்கள் என் சக தோழிகள் ஆனந்தியும்
சிவனேஸ்வரியும்.

இவர்கள்தான் என்னை பற்றிய உயர்ரக கருத்துகள் சொல்லி அவளை என்பால் ஈர்க்கவைத்தார்கள். அதாவது வகுப்பில் என்னைப்பார்த்துதான் இவர்கள் பரிட்ச்சை எழுதுவார்களாம், ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு நான்தான் முதலில் பதில் சொல்வேனாம்....அடக் கடவுளே என் கதை எனக்குத்தானே தெரியும்...!

அதைவிடுங்க எப்படியோ காதலுக்கு பிள்ளையார்சுழி போட்டாகிவிட்டது. எங்கள் காதலை வீட்டில் சொல்லவும் பெருதாக ஒன்றும் கஷ்டமில்லை. பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நாங்கள் பல இடங்களுக்குச் செல்ல, அதைப் பார்த்தவர் எங்கள் இரு வீட்டாருக்கும் சொல்ல, கல்யாணப் பேச்சு தொடங்கியது மெல்ல.. எங்களின் ,அந்த ஆர்ப்பாட்டம் இல்லாத ஆரம்பத்தின் முடிவை நாங்கள் யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஏன் நீங்கள் கூட எதிர்ப்பர்த்திருக்கமாட்டீர்கள்.

‘செம்மொழியான தமிழ் மொழியாம்....’

கொஞ்சம் பொருங்கள் என் கைபேசியை கவனித்து, என் கதையைத் தொடர்கின்றேன்.

“வணக்கம், சொல்லு தேவி”

“வணக்கம், மணி எங்கடா இருக்கே...?”

“கே.எல்-லதான் இருக்கேன்”

“ஓ...ஏதும் வேலையா இருக்கியா...? இல்லைனா... கொஞ்சம் பேசனும்..”

“ம்.... எங்க அம்மா ஏதும் சொன்னாங்கலா...?”

“இல்ல.... நான் தான் பேசினேன்.. அவங்க சொல்றதும் நியாயமாதான் படுது..”

“அப்படியா.. உங்க வீட்டுக்காரர் கணேஷ் என்ன சொன்னாரு...”

“அவருக்கும் விருப்பம்தான், இங்க எல்லாம் தயார்தான்...நீதான்; அம்மாகிட்ட முடியாதுன்னு சொல்லிட்டியாம்...அம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க...உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னுதானே அம்மாவும் சரி நாங்களும் சரி....கேட்கறோம் இப்படி நீ மறுத்தா எப்படிடா...”

“அதுக்காக...... ‘சுஜாதா’ இருந்து இடத்துக்கு இன்னொருத்தியை நான் கொண்டுவருனும்னு சொல்றியா....அம்மாதான் அப்படின்னா...நீயுமா என்கிட்ட இதைக் கேக்கற.... உனக்கு தெரியும்தானே சுஜாதாவும் நானும் வாழ்ந்த வாழ்க்கை...அந்த...அந்த...இடத்தை யராலயும் ஈடு செய்யமுடியாது தேவி..”

“தெரிஞ்சிதாண்டா நாங்க கேக்கறோம்.... சுஜாதா-க்கு ஈடு யாரும் இல்லைதான். ஆனால் உனக்கு என்னடா வயசு இப்பதானே 28. இன்னும் எவ்வளவு காலம்டா நீ தனியா வாழ்வ...சொல்லு”

“தேவி, நாளைக்கே சாவுன்னாகூட எனக்கு சந்தோசம்தான்”

“வாயை மூடுடா...அப்படியெல்லாம் நீ நெனைச்சோ இல்ல நான் நெனைச்சோ சாவு யாருக்கும் வந்திடாது. வாழ்க்கை வாழ்றதுக்குதான்... கணேஷ் தங்கச்சிகிட்ட உன்னை பத்தி எல்லாம் சொல்லிட்டோம். அந்த பொண்ணுக்கு சம்மதம். எங்களுக்கும் உங்க அம்மாக்கும் சம்மதம் உன் வருங்காலத்தை நெனைச்சிப்பாருடா..”

“அது சின்ன பொண்ணுடா....அதுக்கு இதெல்லாம் புரியாது. அந்த பொண்ணை முதல்ல மேற்படிப்பு படிக்கச்சொல்லு.....”

“சரிடா அதைவிடு..ஒன்னு சொன்னா கோவிச்சிக்கமாட்டியே..”

“என்ன கேட்ப...காயத்ரி பத்திதானே..”

“ம்..அதையாச்சும் கல்யாணம் செய்துக்கடா.... நீயும் ஆசைபட்ட பொண்ணுதானே அது..”

“தேவி...சுஜாதா இருக்கும் போது; நான் காயத்ரி மேல ஆசைபட்டது என்னமோ உண்மைதான். அது என்னையே அறியாம நான் செய்த தப்பு. அதுக்காக ரொம்ப அவமானப்பட்டாச்சி, அசிங்கப்பட்டாசி அதுக்கப்பறம் சுஜாதாதான் எனக்கு எல்லாம்னு முடிவெடுத்து வாழ ஆரம்ப்பிச்சபிறகு மறுபடியும் காயத்ரியைப் பத்தி பேசறது நல்லாவா இருக்கு....? ”

“சரிதான் மணி. ஆனால் இதெல்லாம் சுஜாதா இருக்கும் போதுதான் சாத்தியம். இப்போ நிலைமை வேறடா.. சுஜாதா இப்போ இல்லை அதை நீ முதலின் புரிஞ்சிக்கோடா மணி....”

“சரி தேவி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு......”(முடிப்பதற்குள்)

“தெரியும். இப்படி சொல்லுவன்னு. எங்கடா இன்னும் சொல்லலையேன்னு பார்த்தேன் பெரிய வேலையாம் வேலை...சுஜாதா எழுதன எதாவது புத்தகத்தை எடுத்து படிச்சிகிட்டு உன்னோட சுஜாதா போட்டோகிட்ட பேசற வேலைதானே. ”

“(சிரிக்கிறேன்)”

“இந்த நிலையிலும் சிரிக்கிறது உன்னால மட்டும்தான் முடியும். அடுத்த வாரம் நானும் உங்க அம்மாவும் உன்னை பாக்க வரோம். Bye.”

“சரி, அதுவரைக்கும் நான் இருக்கனான்னுப் பார்க்கலாம்.”

“அறை வாங்க போற.....போனை வை.”


அவள் தேவி, என் பால்ய வயது தொல்லைகளில் இரண்டாவது, முதல் தொல்லை புத்தகம் படிப்பது (இந்த தொல்லை மற்றவர் பார்வைக்கு).இரண்டையும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. சரி நான் தொடக்கத்தில் விட்ட கதையிருந்து சொல்றேன்....

சுஜாதா. நான் ரசித்து ரசித்து படிக்கும் எழுத்தாளரின் பெயர் மட்டுமல்ல; நான் துரத்தி துரத்தி காதலித்து கைபிடித்தவளின் பெயரும்தான். தொடக்கத்திலிருந்து என் தனிமையை புத்தகங்களோடு கழித்த நான்; இவளின் வருகையால் தனியை இருவருமாய் கொண்டாடினோம். அந்த கொண்டாட்டம் நீடிக்கவில்லை. நானும் அதற்கு ஒருவையில் காரணம் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்.

அவளின் ‘கடவுள் நம்பிக்கையும்’ என் ‘ஆங்கில அறிவும்’ பலமுறை எங்களின் படுக்கையைப் பிரித்தது. இன்று ஒட்டுமொத்தமாய் சுஜாதா என்னைவிட்டு போய்விட்டாள். அவள் இருக்கும்போது வேண்டுமானால் நான் அவளுக்கு துரோகம் செய்திருக்கலாம். இன்று அதற்கு என் மனம் இடம் தரவில்லை....

என் மனம் முழுவது அவள்தான் சஞ்ஜாரம் செய்கிறாள்.


ஆனால்....


ஆனால்......


நேற்றுதான் மீண்டும் சில ஆணுறைகளை வாங்கியுள்ளேன். என்னை பொறுத்த வரையில் எனது மனமும் எனது உடலும் வேறுவேறுதான்.

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்