பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 27, 2010

சிறுகதை



உன்னை அறிந்தால் நீ..........

வணக்கம்ங்க.. என் பேரு... உங்களுக்கு அநாவசியமான ஒன்னுதான். இருந்தும் என்னோட பெயரா இல்லாத ஒரு பெயரை என் பெயரா சொன்றேங்க.. நான் தோட்டப் புறத்தில் பிறந்து வாழ்ந்தாலும்ங்க கல்யாணம் ஆன பின்னால தோட்டத்தை விட்டு வந்துட்டோம்ங்க. என்னதான் தோட்டத்தைவிட்டு வந்தாலும்ங்க அங்க நாங்க பேசிவந்த ‘வாங்க’ ‘போங்க’-வை மட்டும் ரொம்ப நாளா விட முடியலைங்க. எனக்குள்ள தன்னம்பிக்கை குறைவா இருப்பதுதான் இதுக்கு காரணம்னு என் மனைவி சொன்ன பின்னாலதான்ங்க அதைப் பத்தி நானும் யோசிச்சேங்க .அதும், ஒரு வகையில உண்மைதான்ங்க. என்னால எல்லார்கிட்டயும் தைரியமா பேச முடியாதுங்க. கடைக்கு போனாலும் என்ன சாப்டுன்னு ரொம்ப நேரம் யோசிச்சி என்ன சொல்றதுன்னு தெரியாம முழிப்பேன்ங்க.


இப்படியே இருந்தா நல்லதில்லைன்னு யாரோ சொல்ல.. என்னோட மனைவியும் எனக்கு தன்னம்பிக்கை வரனும்னு அப்படி இப்படின்னு யோசிச்சாங்க.அப்பறம் ஒரு நாள் ஏதோ தன்முனைப்பு பயிற்சி இருக்கு வாங்கன்னு கூப்டுப் போனாங்க. நானும் பின்னாலேயேதாங்க போனேன்.


பணம்கூட என்னோட மனைவிதாங்க கட்டினா.. ஏன்னா அதிகாரமே அவங்ககிட்டதானே இருக்கு. இருக்கட்டும்ங்க...! எப்படியும் இந்த தன்முனைப்பு நிகழ்ச்சியில கலந்து தன்னம்பிக்கையை வளர்த்து அப்பறமா இவங்களை கவனிக்கலாம்னு எண்ணம் இல்லாமல் இல்லை. என் பக்கதிலதாங்க என் மனைவியும் இருந்தாங்க. ரெண்டு மூணு பேரு எல்லார்கிட்டயும் வந்து என்னமோ கேட்டு கையில இருந்த புத்தகத்துல குறிச்சி வைச்சிக்கிட்டாங்க.


என்கிட்ட வந்தவுடன் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலங்க.. என் மனைவிதான் அவங்ககிட்ட பேசினாங்க. அவங்களும் என்னைப் பார்த்து சிரிச்சிட்டு எல்லாம் சரியாகிடும்ன்னு சொன்னாங்க.. என் பின்னால பார்த்தா எண்ண முடிஞ்ச அளவுக்கு சில தலைங்க இருக்குங்க.. எங்க எல்லார்க்கும் கையில் ஒரு சின்ன புத்தகமும் ஒரு பேனாவும் கொடுத்தாங்க.. இன்னும் கொஞ்ச நேரத்தில பேசக்கூடியவர் வருவாராம். அதுக்குள்ள ஒருத்தரு எங்க முன்னால நின்னு அவரு வந்த பிறகு நாங்க என்ன செய்யனும் ஏது செய்யனும்ன்னு சொன்னாருங்க. அவரு பேச ஆரம்பிச்ச பிறகு யாரும் பேசக்கூடாதாம். நாம அவரைப்பத்தி மனசுல என்ன நெனைச்சாலும் அவருக்கு தெரிஞ்சிடுமாம். பத்திங்கலா கேக்கற உங்களுக்கே இப்படி இருக்கே எதிருலே இருக்குற என்னோட நிலைமையைப் பத்தி கொஞ்சம் நெனைச்சிப் பாருங்க..


கறுப்பாவும் இல்லாம வெளுப்பாவும் இல்லாம ஒருத்தரு மேடைக்கு வந்து நின்னு “அனைவருக்கும் வணக்கம்” அப்படின்னு எம்.ஜி.ஆர் படத்துல வில்லன்ங்க பேசுவாங்களே அதே மாதிரி பேசனாருங்க.. ஆனா ஒன்னுங்க, அவரு பேசப்பேச எனக்குள்ள ஏதோ வந்த மாதிரிதான் இருந்ததுங்க. நம்மை சுத்தி எப்பவும் என்னமோ வட்டமா ஒன்னு இருக்குமாமே அந்த பேர்கூட சொன்னாருங்க ஞாபகம் வரமாட்டுதுங்க. அவரு பேசினதுல இருந்து அவரு சாதாரண ஆள் இல்லைனு தெரிஞ்சதுங்க. பேச்சிக்கு இடையில அவரு என்னை கவனிச்சது என்னமோ உண்மைதாங்க.சுமார் ரெண்டு மணிநேரம் அவரு பேசினாருங்க. அப்பறம் அடுத்தவாரம் வரச் சொன்னாருங்க. கிளம்பும் போது கவனிச்சா வந்த எல்லார் முகத்திலும் என்னமோ “நமிதா” வீட்டு அட்ரஸ் கிடைச்ச ஒரு சந்தோஷம்ங்க..


என் மனைவி சொன்னப் பின்னாலதான் தெரியும் அடுத்த வாரமும் வரனுமாம். அப்பதான் இந்த ஒரு வாரம் கிடைச்ச மாற்றங்களைப் பத்தி எல்லாரும் மேடையில் ஏறி பேசனுமாம்.


அவர் அந்த ரெண்டு மணிநேரத்தில் என்ன பேசினாருன்னு, நான் முழுசா உங்ககிட்ட சொல்லகூடாதாம்.அவர்தான் சொன்னாருங்க. அதான் அதைப் பத்தி நான் ஒன்னும் பெரிசா சொல்லலைங்க. ஆனா பாருங்க, அவர் பேச்சில ரொம்ப நம்மலோட சிலை வழிபாடு அப்பறம் கிரகம், நட்சத்திரம் பத்தி ரொம்ப வந்தது. என்னமோ வெள்ளைக்காறனுக்கு பொறந்த மாதிரி அவரு பேசினது இருக்கே என்னன்னு சொல்லங்க..அட பாருங்களேன் எனக்கு தைரியம் வந்த மாதிரி இருக்குங்க. அட ஆமாங்க, இல்லைன்னா இப்படி அவரு சொல்லக் கூடாதுன்னு சொன்னதை உங்ககிட்ட சொல்லுவனா..?


ஒரே நாள்ல இந்த அளவு மாற்றம்னா இன்னும் ஆறு நாள் என்னென்ன நடக்கும்னு நெனைச்சா அதே எனக்கு புது தெம்பு வந்த மாதிரி இருக்குங்க. இன்னும் எதுக்குங்க “வாங்க” “போங்க” எல்லாம். நீங்களும் நானும் சரிசமம்தானே. என்ன சொல்றிங்க.


மூனாவது நாள் சாப்பாட்டுக் காடையில், கடைக்காரரு என்னை ஒரு மாதிரியா பாத்தாரு. அப்பறம் எப்பவும் அமைதியா சாப்ட்டு வர ஆளு நான். இன்னிக்கு சாப்பாடு, விலை அதிகம், ருசியும் இல்லைன்னு முகத்துக்கு நேரா புகார் கொடுத்தா அப்படிதானே பார்ப்பாரு. ஐந்தாவது நாள், வேலை செய்யும் இடத்திலும் அப்படித்தான் என் வேலையை முன்னர் செய்ததைக் காட்டிலும் இப்போது வேகமாகவும் சிறப்பாகவும் செய்கின்றேன் என மேலதிகாரிகள் சொல்கின்றார்கள்.

ஒரு வாரம் கழித்து நினைத்துப்பார்க்க முடியாத ஏதோ ஒரு நாள். இன்று காலை அலாரம் வைக்காமல் எழுந்து குளித்து தன்முனைப்பு பயற்சியாளர் சொல்லிக்கொடுத்தது போலவே கண்ணாடி முன் நின்று பிரார்த்தனை செய்தேன்.


முன்பை விட மனம் லேசாகியது. தொடர்ந்து ஒரு வாரம் இப்படி பிரார்த்தித்து வந்ததால் விரைவில் மனம் லேசாகத் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் கால் வலி முதல் முதுகு வலி வரை வந்து நான் பட்ட கஷ்டம் எனக்கு ‘மட்டும்தான்’ தெரியும். எல்லாவற்றையும் கடந்து வர அந்த தன்முனைப்பு பேச்சாளர்தான் காரணம்.அவருக்கு என் நன்றி எப்போதும் உண்டு. இந்த ஒரு வாரத்தில் எனக்கு ஏற்பட்ட மாற்றங்களை நினைக்கும் போது தன்முனைப்பு நிகழ்ச்சிகளுக்கு செல்வதால் இவ்வளவு நன்மைகளா..? என என்னை நானே கேட்டுக்கொள்கின்றேன். போன வாரம் வரை எதற்கெடுத்தாலும் பயந்து அடுத்தவர்களை சார்ந்து வாழ்ந்து வந்த நான் இந்த ஒரு வாராம் ஏற்பட்ட மாற்றங்களை எப்படிதான் ஏற்றுக்கொள்வது.


தெரியுமா..! எனக்கு தேவையான உணவுகளை நானே சமைக்கின்றேன்.என் துணிமணிகளை நானே துவைத்துக் காய வைக்கின்றேன். எல்லா நாளும் கண்ணாடி முன் பிரார்த்திகின்றேன். இரவில் உறங்கும் போதும் தனிமையின் சுகம் உணர்கின்றேன். இன்றுதான் அந்த தன்முனைப்புப் பயிற்சிக்கு நான் செல்ல வேண்டும். உங்களிடம் சொன்னது போல், எனக்கு ஏற்பட்ட மாற்றங்களை எல்லார் முன்னும் சொல்லி அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.


புறப்படத் தொடங்கிவிட்டேன். தன்னம்பிக்கையோடு தனியேதான் செல்கின்றேன். அடடே.. என் மனைவியைப் பற்றி சொல்லவேயில்லையே. ம்..ம்...என்ன சொல்வது அவள்தான் அந்த தன்முனைப்பு பேச்சாளருடன் இருக்கின்றாளே..!

.....தயாஜி வெள்ளைரோஜா....

2 comments:

lolly999 சொன்னது…

Wonderful story brother!!! keep it up!!!

தயாஜி சொன்னது…

நன்றி.... சகோதரி.....
தொடர் வருகை புரியுங்கள்
நல்லதே நடக்கும்....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்